×

மணப்பாடு கருமேனியாற்றில் சுவாமி, அம்மன் சிலைகள் மீட்பு

உடன்குடி: மணப்பாடு கருமேனியாற்றில் சுவாமி, அம்மன் சிலைகள் மீட்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே மணப்பாட்டில் கருமேனியாறு கடலில் கலக்கிறது. நேற்று முன்தினம் மாலை மணப்பாடு பாலம் வழியாகச் சென்ற பொதுமக்கள் ஆற்றில் யாரோ கைகளை உயர்த்திக் கொண்டு நிற்பது போன்ற காட்சியை கண்டனர். நீண்டநேரம் ஆகியும் அதில் இருந்து எந்தவித அசைவும் இல்லாததால் அங்கு வேடிக்கை பார்க்கும் கூட்டம் அதிகமானது. தகவலறிந்து மணப்பாடு விஏஓ நடராஜன் மற்றும் போலீசார், கருமேனியாறு முகத்துவார பகுதிக்கு விரைந்து வந்தனர். ஆற்றில் இறங்கிச் சென்று பார்த்தபோது, சிலைகள் எனபது தெரியவந்தது. இதையடுத்து ஆற்றில் மூழ்கிக் கிடந்த கருப்பசாமி, சுடலைமாடன், அம்மன் உள்ளிட்ட சிமென்டாலான  7 சுவாமி சிலைகளையும் மீட்டெடுத்தனர்.

மீட்கப்பட்ட சிலைகளை போலீசார் உடன்குடி வருவாய்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இச்சிலைகள் அனைத்தும் தற்போது  ஆர்ஐ அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.வழக்கமாக கோயில்களில் சிதைந்த சிலைகள் எதுவும் இருந்தால் அதை அங்கு வைத்து வழிபடமாட்டார்கள். சேதமான சிலைகளை ஆறு, கடல், குளம், உள்ளிட்ட நீர்நிலைகளில் போட்டுவிடுவர். கருமேனியாற்றில் கிடைத்துள்ள 7 சிலைகளும் எந்தவித சேதமுமின்றி நல்ல நிலையில் உள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஆறு, மணல் மேடாக இருந்திருக்ககூடும் என்றும் இங்கு சிலைகளை வைத்து வழிபட்டிருக்ககூடும் என்றும், காலப்போக்கில் ஆற்றில் நீர்வரத்து இருந்ததால் அந்த சிலைகளை அவர்கள் அப்புறப்படுத்தாமல் சென்றிருக்ககூடும் என்றும் கூறப்படுகிறது. வரலாற்று ஆய்வாளர்கள் அந்த சிலைகளை ஆய்வு செய்தால் அவை எந்த காலத்தைச் சேர்ந்தவை என தெரிந்துவிடும்.

Tags : Recovery ,Swami ,Amman ,Manapad , Manapad
× RELATED ஆண் சடலம் மீட்பு