×

திருப்புத்தூரில் நாளை மருதுபாண்டியர் குருபூஜை விழா

திருப்புத்தூர்: திருப்புத்தூரில் நாளை நடக்க உள்ள மருதுபாண்டியர்களின் 218வது குருபூஜை விழா தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி ஆய்வு செய்தார். ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய நாட்டின் விடுதலைக்கு முதல் போர்ப்பிரகடனம் செய்து இன்னுயிர் ஈந்தவர்கள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள். இவர்களுடன் சேர்த்து, 500க்கும் மேற்பட்டோரை ஆங்கிலேயர்கள் திருப்புத்தூரில் 1801ம் ஆண்டு தூக்கிலிட்டனர். இவர்கள் தூக்கிலிடப்பட்ட தினம் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. நாளை (அக். 24) 218வது ஆண்டு குருபூஜை விழா அனுசரிக்கப்பட உள்ளது.

இதையொட்டி சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் சுவிடீஷ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் அரசு நினைவு மண்டபத்திலும், திருப்புத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே தூக்கிலிடப்பட்ட இடமான நினைவு ஸ்தூபியிலும், அரசு சார்பில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்காக மண்டபத்தை வண்ணம் தீட்டுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. நினைவு மண்பத்திற்கு நேற்று வந்த சிவகங்கை எஸ்பி ரோகித்நாதன், மண்டபம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். திருப்புத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் ஆனந்தி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

நாளை காலை 7 மணியளவில் மணி மண்டபத்தில் வாரிசுதாரர்கள் சார்பில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டு குருபூஜை நடைபெறும். 8 மணியளவில் அரசு சார்பில் கலெக்டர் ஜெயகாந்தன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைலவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளனர். தொடர்ந்து காலை 9 மணியளவில் திருப்புத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே தூக்கிலிடப்பட்ட இடமான நினைவு ஸ்தூபியிலும் மலர் மரியாதை செய்ய உள்ளனர்.

ஓபிஎஸ் பங்கேற்பு?

குருபூஜை விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் ‘144’

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை (அக். 24) திருப்பத்தூரிலும், அக். 27ல் காளையார்கோவிலிலும் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடக்கிறது. அக். 30ல் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதையொட்டி இன்று (அக். 23) காலை முதல் அக். 31 வரை சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார். இந்த நாட்களில் உரிய அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் நேற்றுமாலை முதல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

Tags : ceremony ,Maruthupandiyar Kurupuja ,Thirupputhur. Tirupputtur , Tirupputtur
× RELATED சீரடி சாய்பாபாவுக்கு திவ்ய விரத பூஜை செய்யும் முறை..!