×

சேலத்தில் ரோட்டில் 1 கி.மீ.,க்கு மழை தண்ணீர்: தேங்கிய தண்ணீரில் பரிசல் ஓட்டி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

சேலம்: சேலத்தில் பை-பாஸ் சாலையோரம் 1 கிலோ மீட்டருக்கு மழைநீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதி மக்கள் பரிசல் ஓட்டிச் சென்று, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி 60வது வார்டுக்கு உட்பட்ட ஊத்துமலை அடிவாரத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள சேலம்-நாமக்கல் பைபாஸ் சாலை வழியாகத்தான் நகர பகுதிக்கு வரவேண்டி உள்ளது. இந்த பைபாஸ் சாலையோரம், சர்வீஸ் ரோட்டில் பெரிய அளவில் கால்வாய் செல்கிறது.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சிறிய அளவில் மழை பெய்தால் கூட தண்ணீர் செல்லாமல் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை முழுவதும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி வந்தது. இச்சூழலில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி, சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஊத்துமலை மற்றும் நிலவாரப்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி பகுதி மக்களால் அச்சாலையை வழியே வெளியே வரமுடியவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். சில இளைஞர்கள், பரிசல் கொண்டு வந்து பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் ஓட்டினர். பின்னர், சேலம்-நாமக்கல் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு நாமக்கல் செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றி தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார், உதவி கமிஷனர் திருமேனி, இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், மாநகராட்சி அதிகாரிகளும், சேலம் தெற்கு தாசில்தார் ஆர்த்தி ஆகியோரும் வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுது மறியலில் ஈடுபட்டவர்கள், “ஊத்துமலை மற்றும் பைபாஸ் சாலையில் இருந்து வரும் நீர் 1 கிலோ மீட்டருக்கு சர்வீஸ் ரோட்டில் தேங்கி விடுகிறது. இதனால் கால்வாய் எங்கு இருக்கிறது என்பதே தெரிவதில்லை. இவ்வழியே வரும் வாகன ஓட்டிகளும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் கால்வாய்க்குள் தவறி விழுந்து படுகாயம் அடைகிறார்கள். அதனால், சாக்கடை கால்வாயை தூர்வாரி, தண்ணீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இனியாவது, தண்ணீர் தேங்காமல் செல்ல உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இதை கேட்ட அதிகாரிகள், உடனடியாக கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். அதன்படி சிறிய அளவிலான பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து, கால்வாய் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அந்த பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்து தனியார் கட்டி வைத்திருந்த தடுப்புகளையும் இடித்து அகற்றினர். அதன்பின் தண்ணீர் வடிந்தது. இந்த மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road ,Salem Road , Rainwater
× RELATED சிவகங்கை மாவட்டம் கீழடியில்...