மழைக்காலங்களில் மழைப்பொழிவை அளவிடுவது எப்படி?: வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் மழையை அளவிட இரண்டுவகை மழை மானிகளை பயன்பாட்டில் வைத்துள்ளது. ஒன்று சாதாரணமாக குடுவையில் தேங்கும் மழைநீரை அளவிடும் முறை. மற்றொன்று தானியங்கி மழைமானி. இத்தகைய மழை மானி 24 மணி நேரத்தில் பெய்யும் மழையை ஒரு குடுவையில் சேமித்து கிராப் மூலம் அளவிட்டு சொல்கிறது. சாதாரண மழைமானியில் மழை நீரை சேமிக்கும் கருவியுடன், மழைநீரை அளவிடும் கருவி ஒன்றும் உள்ளது. தானியங்கி மழைமானியில் சேமிக்கும் பகுதி கிடையாது. அதற்கு பதிலாக மழை பெய்யும் போது மழை நீர் ஒரு குடுவையில் நிரம்பியதும், வரைபடத்தில் பொருத்தப்பட்ட பேனா மேலும் கீழும் வரைபடத்தில் கோடு மூலம் வரைந்து மழை அளவை அளவிடும். மழை காலங்களில் வானிலை மையம் சார்பில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த மழை மானிகளை கொண்டு மழை அளவு அளவிடப்படுவதாகவும், எந்த இடத்தில் எந்த நேரத்தில் மழை எவ்வளவு பெய்துள்ளது என்பதை தானியங்கி மழை மானி அளவிடுவதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை பொழிவை லேசான மழை, மிதமான மழை, கனமழை, மிக கனமழை, அதிக கனமழை என ஐந்து வகையில் வானிலை ஆய்வு மையம் பிரித்துள்ளது. நாளொன்றுக்கு 2.5 செ.மீ பெய்யக் கூடிய மழை லேசான மழை என்றும், 6 செ.மீ மழை பெய்தால் மிதமான மழை என்றும் அளவிடப்படுகிறது. இந்த மழை எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதால் இதற்கு வானிலை ஆய்வு மையம் பச்சை வண்ணத்தை கொடுக்கிறது. 7 முதல் 12 செ.மீ வரை மழை பெய்தால் அதனை கனமழை என குறிப்பிடுவதுடன் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாது என இதனை மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிடுகின்றனர். 12 முதல் 20 செ.மீ மிக கனமழை என்பதால் சாலை ஓரமாக தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையும், மின்விநியோக துண்டிப்புடன் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுத்திவிடும் என்கின்றனர். 20 செ.மீ-க்கும் மேல் சென்றால் அதனை அதீத கனமழை என குறிப்பிடும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்டும் விடுகிறது.

இத்தகைய மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கும் என்றும், அதீத கனமழை இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பெய்தால் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்கின்றனர் வானிலை மைய அதிகாரிகள். கடந்த 50 ஆண்டுகளாக ஒரு இடத்தில் பெய்த மழை பதிவை வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு வருடம் பெய்த மழை அளவாக கணக்கிட்டு சராசரி மழை அளவாக குறிப்பிடுகின்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 80 இடங்களில் மழை அளவிடும் மழை மானி கருவிகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வைத்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழக அரசு சார்பில் 300-க்கும் மேற்பட்ட மழை அளவிடும் மழைமானி கருவியை வைத்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் பெறப்பட்ட மழை அளவை காலை 8.30 மணிக்கு கணக்கிட்டு மழை செய்தியாக மக்களுக்கு தெரிவிக்கிறது. இவ்வாறு மழைகாலங்களில் மழை பொழிவானது கணக்கிடப்படுகிறது.

Tags : rainfall , The rainy season, rainfall, Measure, how, Description
× RELATED வெப்பச்சலனம் காரணமாக தென்...