×

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலி: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை: கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தற்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், உடனடி தேவைகள் மற்றும் கூடுதல் உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த 21ம் தேதி வெளியிட்ட வானிலை அறிக்கையில், தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. இதைதொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், உதயகுமார்,  தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி திரிபாதி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.  

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழையினால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய 4,399 பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 639 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9,162 பெண்கள் அடங்கிய 21,597 எண்ணிக்கையிலான முதல் நிலை மீட்பாளர்களும், மேலும் கால்நடைகளை பாதுகாக்க 8,871 முதல் நிலை மீட்பாளர்களும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நடுவதற்கும், பேரிடர் காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் 9,909 முதல் நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தால், 1 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பருவமழை காலத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,
* கீழே விழும் மரங்களை உடனே அகற்ற ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள், நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.  
* மீட்புக்குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.
* வயிற்று போக்கு மற்றும் தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்.  
* இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   
* உடனடி தேவைகள் மற்றும் கூடுதல் உபகரணங்கள், சிறப்பு கருவிகள் போன்றவை வாங்குவதற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு 50 வீரர்கள் விரைவு
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கன மழையினை தொடர்ந்து,  தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையினரால் பயிற்சி அளிக்கப்பெற்ற 50  வீரர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் இருந்து  கூடுதல் தீயணைப்பு வீரர்களை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் பாதிப்பிற்குள்ளாக கூடிய இடங்களில், தேசிய பேரிடர் மீட்பு  படை செல்வதற்கு தயார் நிலையில் இருக்கவும் முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள், திருமண மண்டபங்கள் தயார்
மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும்  பாதிப்பிற்குள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு  121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களை தவிர, 4,768 பள்ளிகள், 105 கல்லூரிகள்,  2,394 திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.

ஜெனரேட்டர்கள் ரெடி
மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும்  இயந்திரங்கள், 2,897 பொக்லைன் இயந்திரங்கள், 2,115 ஜெனரேட்டர்கள் மற்றும்  483 ராட்சத பம்புகள் தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களாக தயார் நிலையில்  உள்ளன.

மீட்பு படையில் 14,300 பேர்
1,000 காவலர்களை கொண்ட தமிழ்நாடு  பேரிடர் மீட்புப் படை தவிர, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில  பேரிடர் மீட்பு படையினரிடம் பயிற்சி பெற்ற 4,155 காவலர்கள் (சென்னை  நீங்கலாக) அனைத்து கடலோர மாவட்டங்களிலும், 1,844 காவலர்கள் இதர  மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்தில் 607 காவலர்களும் ஆக மொத்தம் 6,606  பயிற்சி பெற்ற காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில்  நிறுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Meteorological Center Warning Echo ,ministers ,consultation ,CM ,consultants ,chief minister , Meteorological Department, Ministers, Chief Minister of Tamil Nadu
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...