ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்: அமலாக்கத்துறை காவலில் உள்ளதால் வெளியில் வரமுடியாது

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. இதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு  நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தன. இதையடுத்து ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை, மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. இதையடுத்து வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்ததால் தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பானுமதி, போபண்ணா மற்றும் ஹரிசிக்கேஷ் ராய் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில்,”ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீனை நீதிமன்றம் வழங்குகிறது. அவர் பிணையத் தொகையாக ரூ.1 லட்சம் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். மேலும், வெளிநாடு எங்கும் செல்லக் கூடாது. அதேபோல், இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் அழைக்கும் போதெல்லாம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை பொருத்தமட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு தரப்பும் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீன் என்பது சிபிஐ தொடர்ந்த வழக்கில் மட்டும்தான்.

இதில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அதனால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் ப.சிதம்பரம் விடுதலையாகி வெளியில் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ப.சிதம்பரம் நாளை பிற்பகல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள ஜாமீன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.

Tags : Supreme Court , INX Media Abuse, P. Chidambaram, Supreme Court
× RELATED உச்ச நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் 6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்