×

சமூக வலைதள கணக்குடன் ஆதார் இணைப்பு: அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்

புதுடெல்லி: நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் நடந்து வரும் சமூக வலைதளம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை, மும்பை போன்ற பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றது. பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஒருமித்த கருத்து ஏற்படும் வகையில் இந்த வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மனு தாக்கல் செய்தன.

இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிரான தங்களது எதிர்ப்பை கைவிட்டார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு, சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் நடந்து வரும் அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என உத்தரவிட்டது. மேலும், 2020ம் ஆண்டு ஜனவரி கடைசி வாரத்துக்கு முன்பாக, இது தொடர்பான அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி முன்னிலையில் பதிவாளர் பட்டியலிடவும், சமூக வலைதள கணக்குகளில் தவறு நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் நெறிமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசு ஜனவரியில் அறிக்கை தாக்கல் செய்வதற்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : Supreme Court , Social network, Aadhaar link, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...