வங்கி பிரச்னைகள் அச்சமளிக்கிறது: நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து

புதுடெல்லி: நாட்டில் தற்போது நிலவும் வங்கி பிரச்னைகள் அச்சமளிப்பதாக உள்ளதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூப்லோ, மெக்கல் கிரெமர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாகவே இந்திய பொருளாதாரம் குறித்து அபிஜித் பானர்ஜி கருத்து கூறி வந்தார். இந்நிலையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற பின்னர்,  அபிஜித் பானர்ஜி இந்தியாவின் பொருளாதார சரிவு கவலை அளிப்பதாக தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில் சில எதிர்ப்புகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், அபிஜித் பானர்ஜி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்  சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள். இதன் பின்னர், அபிஜித் பானர்ஜி,  ஊடகவியலாளர்களுடன் பங்கேற்ற கலந்துரையாடல் நடந்தது. அப்போது அபிஜித் பானர்ஜி கூறுகையில், “தற்போது நாட்டில் நிலவும் வங்கி பிரச்னைகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றால் நாம் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். ஏனென்றால் நாம் தொடர்ந்து ஒரே மாதிரியான முறையையே பின்பற்றி  வருகின்றோம். நாம் அதுகுறித்து விழிப்புடன் இருப்பது அவசியமாகும். வங்கி கொள்கையில் முக்கியமான மற்றும் தீவிரமான மாற்றங்கள் செய்வது அவசியம் என நான் கருதுகிறேன். அரசானது பொதுத்துறை வங்கிகளில் தனது பங்கை 50 சதவீதத்துக்கும் கீழாக குறைக்க வேண்டும். அப்போது தான் அவை மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் எல்லைக்கு வெளியே வர முடியும். அப்போது வங்கிகளை கண்காணிப்பு ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியாது. வராக்கடன் விவகாரத்தில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணைகள் குறித்த அச்சம் வங்கியாளர்களை கடன் வழங்குவதிலிருந்து தடுத்து விடுகிறது “ என்றார்.

இந்த நிகழ்ச்சியின்போது பொருளாதார நிலை மற்றும் அரசின் கொள்கைகள் குறித்த கேள்விகளை நிராகரித்துவிட்டார். பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘பிரதமர் மோடியுடனானது சிறந்த சந்திப்பு. பிரதமர் மோடிக்கு எதிராக தாம் கருத்து கூறுவதாக ஊடகங்கள் தெரிவிக்க முயற்சிப்பது குறித்து மோடி நகைச்சுவையுடன் பேசினார். அவர் தொலைக்காட்சிகளையும், உங்களையும் கவனித்து வருகின்றார். நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பதை அவர் அறிவார்” என்று தெரிவித்தார்.

Related Stories: