போலீஸ் காவலில் 100 பேர் மரணம்: 2017ல் மட்டும் 50 லட்சம் வழக்குப்பதிவு,.. கொலை, கொள்ளையில் தமிழகம் ஆறாமிடம்

புதுடெல்லி: கடந்த 2017ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்றப் பதிவேடு ஆவண காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: கடந்த 2017ல் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் 50,07,044 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில், இந்திய தண்டனைவியல் சட்டத்தின் கீழ் 30,62,579 வழக்குகளும், சிறப்பு மற்றும் மாநிலங்களின் சட்டத்தின் கீழ் 19,44,465 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு நாடு முழுவதும் 48,31,515 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2017ல், பதிவான வழக்குகளின் மொத்த எண்ணிக்கையில் 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் கொலைவெறி தாக்குதல் தொடர்பாக, தனிநபர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்தான் அதிகமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, 9,89,071 வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஆசிட் வீச்சு, ஆயுதங்களால் தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக 4,94,617 வழக்குகளும், பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக 86,001 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்கள் தொடர்பாக 7,75,263 வழக்குகளில், 5,89,058 வழக்குகள் பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்பானவை. வீடுகளில் நடைபெற்ற திருட்டு செயல்கள் தொடர்பாக மட்டும் 2,44,119 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வாறாக திருட்டு, கொள்ளை போன்ற வகையில் களவுப்போனதாக மதிப்பிடப்பட்ட 5,002 கோடி மதிப்பிலான பொருள்களில் 1,296 கோடி மதிப்பிலான பொருள்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், சிறார்கள் கடத்தப்பட்டது தொடர்பாக 95,893 வழக்குகள் பதிவாகியுள்ளன. நாடுமுழுவதும் கடத்தப்பட்ட 1,00,555 பேர்களில் 56,622 குழந்தைகளும், 18 வயதை கடந்த 43,933 பேர்களும் அடங்குவர். இவர்களில், 42,326 பெண் குழந்தைகள் மட்டும் கடத்தப்பட்டுள்ளனர். முக்கியமாக, பல்வேறு மாநிலங்களில் மொத்தம் கடத்தப்பட்டவர்களில் 96,650 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட 1,992 பேரும் அடங்குவர். பெண்களுக்கு எதிரான வழக்குகளில் 33.2 சதவீதம் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்களால் நடந்தவை. பாலியல் பலாத்காரம், சீண்டல் தொடர்பாக 10.3 சதவீத வழக்குகள் பதிவாகியுள்ளன.

அரசியல், பழிவாங்கல், கொள்ளை, முன்பகை, கள்ளக்காதல் போன்ற பல்வேறு கொலைகள் தொடர்பாக நாடு முழுவதும் 28,653 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை, 2016ம் ஆண்டை ஒப்பிடும்போது, 5.9 சதவீதம் குறைந்துள்ளன. நீதிமன்ற காவல் மற்றும் போலீஸ் விசாரணையில் 100 பேர் மர்மமான முறையில் இறந்தனர். நீதிமன்ற காவலில் (சிறையில் அடைக்கப்பட்டவர்கள்) 58 பேரும், போலீஸ் காவலில் 42 பேரும் இறந்துள்ளனர். காவல் இறப்பில் ஆந்திரா 27 பேருடன் முதலிடத்திலும், அதற்கடுத்ததாக குஜராத், மகாராஷ்டிராவில் தலா 15ம் பதிவாகி உள்ளது. இறந்த 100 பேர் தொடர்பான வழக்கில் இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்விவகாரம் தொடர்பாக 33 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 27 வழக்களுக்கு மட்டும் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ல் 92 பேர் கஸ்டடியில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் 10.1 சதவீதத்துடன் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்திலும், 9.4 சதவீதத்துடன் மகாராஷ்டிரா 2ம் இடத்திலும், 8.8 சதவீதத்துடன் மத்திய பிரதேசம் 3ம் இடத்திலும், 7.7 சதவீதத்துடன் கேரளம் 4ம் இடத்திலும் இருந்தாலும், தமிழகத்தை பொருத்தவரை 5.8 சதவீதத்துடன் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: