விரைவில் பக்தர்களை சந்திப்பேன் வெளிநாடு தப்பிச்செல்லவில்லை தமிழகத்தில்தான் இருக்கிறேன்: கல்கி சாமியார் பரபரப்பு வீடியோ தகவல்

திருமலை: பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கல்கி சாமியார் வெளியிட்ட வீடியோவில், ‘வெளிநாடு தப்பிச்செல்லவில்லை. தமிழகத்தில் தான் இருக்கிறேன். விரைவில் பக்தர்களை சந்திப்பேன்,’ என்று தெரிவித்துள்ளார்.கல்கி சாமியாரின் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஆசிரமத்தில் சுமார் 1000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கல்கி சாமியார் என்று அழைக்கப்படும் விஜயகுமார், அவரது மனைவி பத்மாவதி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் பரவின.

இந்நிலையில், சத்தியவேடு தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஆதிமூலம் கூறுகையில்,  ‘கல்கி சாமியார் விஜயகுமார், அவரது மனைவி பத்மாவதி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களை கண்டுபிடித்து விசாரணை செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கல்கி சாமியார் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:நான் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. தமிழகத்தில்தான் இருக்கிறேன். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேமத்தில் தங்கி இருக்கிறேன்.

வருமான வரித்துறை அதிகாரிகள், நாங்கள் வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக கூறவில்லை. எனவே, பக்தர்கள் எந்தவித ஆதங்கமும் அடைய தேவையில்லை. வழக்கம்போல் நேமம், சத்யலோகா, ஏகம் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விரைவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பேன் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பத்மாவதி பேசுகையில், ‘நல்ல சக்தி, ஆரோக்கியத்துடன் விரைவில் உங்களை சந்திப்போம்,’ என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>