‘பொறுப்புள்ள அரசியல்வாதியாக இருந்தால் உடனடியாக பிரச்னையை தீர்த்து வையுங்கள்’: கர்நாடக துணை முதல்வருக்கு சிறுமி எழுதிய பரபரப்பு கடிதம்

பாகல்கோட்டை: கர்நாடகாவில், தனது வீட்டு அருகே மழைநீரில் மூழ்கி கிடக்கும் சாலையை சரி செய்யக்கோரி ஒரு சிறுமி துணை முதல்வர் கோவிந்த கார்ஜோளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.  இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின் முத்தோல் தாலுகாவில் உள்ளது ரன்னே பெளகலி கிராமம். இங்குள்ள 17வது வார்டைச் சேர்ந்த சிம்மடா சாலை, தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீரில் மூழ்கி உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சாலையில் இடுப்பளவுக்கு  தண்ணீர் ஓடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.

Advertising
Advertising

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக 8 வயது சிறுமி, தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து துணை முதல்வர் கோவிந்த கார்ஜோளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவள் எழுதி இருப்பதாவது: கடந்த மூன்று நாட்களாக எங்கள் சாலை மீது மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. என்றாலும் யாருமே இதை கண்டுகொள்ள்வில்லை. நீங்கள் உண்மையாகவே மக்கள் சேவை செய்வேன் என்று உறுதி எடுத்து அதிகாரத்திற்கு வந்த பொறுப்புள்ள அரசியல்வாதியாக இருந்தால், உடனடியாக பிரச்னையை தீர்த்து வையுங்கள்.  ஒரு சாலையை சரி செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் மக்கள் பிரதிநிதியாகி என்ன பயன்?

இவ்வாறு கடிதத்தில் அந்த சிறுமி எழுதி இருக்கிறாள்.  இப்படி உள்ளூர் எம்.எல்.ஏ., நகர பஞ்சாயத்து தலைவர், சேர்மன், வார்டு உறுப்பினர், தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அனைவருக்கும் சாட்டை அடி கொடுப்பது போன்று எழுதி உள்ள கடிதத்தை அவள் சாலையில் இடுப்பளவு நீரில் நின்றபடி படிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: