மணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க 18,000 கோடியில் கட்டமைப்பை மேம்படுத்த ரயில்வே திட்டம்

புதுடெல்லி: மணிக்கு 160 கிமீ வேகத்தில் டெல்லி- மும்பை, டெல்லி- கொல்கத்தா வழித்தடங்களில் ரயில்களை இயக்கும் வகையில் கட்டமைப்பை மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பு, ரயில்வேத் துறையுடன் இணைந்து, டெல்லியில் சர்வதேச ரயில் கருத்தரங்கம் மற்றும் 13வது சர்வதேச ரயில்வே பொருட்கள் கண்காட்சி நடத்துகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் கலந்து கொண்டு பேசியதாவது: டெல்லி- மும்பை, டெல்லி- கொல்கத்தா வழித்தடங்களில் அடுத்த 4 ஆண்டுகளில் ரயில்களை மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்க ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், மும்பை - அகமதாபாத் வழித்தடங்களில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் புல்லட் ரயில்களையும் இயக்க முடிவு செய்துள்ளது.

Advertising
Advertising

தற்போது, இந்த வழித்தடங்களில் அதிகப்பட்சமாக மணிக்கு 99 கிமீ வேகத்தில்தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில், அறிமுகம் செய்யப்பட்ட டெல்லி- வாரணாசி  வழித்தடத்தில் இயங்கும், ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் 104 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. எனவே, மணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க, அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம். இதற்காக தண்டவாளங்களை தரம் உயர்த்தல், தடுப்பு வேலிகள் அமைத்தல், சிக்னல்களை தரம் உயர்த்துதல், ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகளை அகற்றுதல் போன்ற திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் 68 ஆயிரம் கிமீ தூரத்துக்கு அகலப்பாதைகள் மின்மயமாக்கப்படும். தற்போது, 28 ஆயிரம் கிமீ தூரம்  மின்மயமாக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு மட்டும் 7 ஆயிரம் கிமீ பாதையை மின்மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். தவிர, அதிகம் பயன்படுத்தப்படும் 34 ஆயிரம் கிமீ ரயில் பாதைகளில் கூடுதல் தண்டவாளங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டங்களை செய்லபடுத்த ரயில்வேத் துறை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் கட்டமைப்புகளை வசதிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது, 95 சதவீத ரயில் பெட்டிகளில் பயோ கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 3 மாதங்களில் மீதமுள்ளவையும் பயோ கழிவறையாக மாற்றப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: