அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி அண்ணா நூலகத்தை பராமரிக்க வேண்டும்: ஆய்வு செய்தபின் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: “அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பராமரிக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் பொதுமக்களுக்கு நேற்று நிலவேம்பு குடிநீர் வழங்கினார். அப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, மாவட்ட செயலாளர் மா.சுப்பிரணியன் எம்எல்ஏ, கு.க.செல்வம் எம்எல்ஏ, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இதை கட்டுப்படுத்துகிற முயற்சியில் அதிமுக அரசு இன்னும் முழுமையாக ஈடுபடவில்லை என்பது வேதனைக்குரியதாகும். இதுவரையில் 2000க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.சில குழந்தைகள், சிறுவர்கள்-சிறுமிகள் தொடர்ந்து ஆங்காங்கே இந்த நோயினால் பாதிக்கப்பட்டு, இறந்து கொண்டிருக்கிறார்கள் என்ற வேதனையான செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. எனவே,  அரசு உடனடியாக இப்பிரச்சனையில் முழுக் கவனத்தையும் செலுத்திடவேண்டும்.

எப்படி குட்கா விற்பனையில் மாமூல் வாங்குவதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்   தீவிரமாக இருந்தாரோ, அதுபோன்ற தீவிரத்தோடு இந்த டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துகிற முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.மக்கள் நிலவேம்புக் குடிநீர் குடிப்பதால், இந்த காய்ச்சலை ஓரளவுக்குக்  கட்டுப்படுத்த முடியும் என்ற காரணத்தால், ஆங்காங்கு, திமுகவை சார்ந்த நிர்வாகிகள், நிலவேம்புக் குடிநீரை பொதுமக்களுக்கு திமுக சார்பில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். அந்த பணியை திமுக தொடர்ந்து செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் நிருபர்கள் மு.க.ஸ்டாலினிடம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்திருக்கிறீர்கள். அதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டனர். அதற்கு மு.க.ஸ்டாலின் கூறியதாவது: அண்ணா நூற்றாண்டு நூலகம், 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கட்டப்பட்டு, அண்ணாவின் 102வது பிறந்த நாளில் 15.9.2010 அன்று கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிறகு, 2011ல் இருந்து அந்த நூலகம் பராமரிக்கப்படாமல் உள்ளது. பராமரிக்காமல் விட்டால் கூட பரவாயில்லை, அதைச் சீரழிக்கக் கூடிய வகையில் பல செயல்களை இந்த அரசு எடுத்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இப்பொழுது இரண்டு நாட்களுக்கு முன்பு,  அரசு நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு ஒரு அரசாணை பிறப்பித்திருக்கிறது. நூலகத்திற்கு புதிதாக உறுப்பினர்கள்- வாசகர்கள் சேர்த்திட வேண்டும் என்று உத்தரவு போட்டுருக்கிறது.  அந்தச் செய்தி நேற்றைக்கு வெளிவந்தது. அதனை அடுத்து, நான் அண்ணா நூலகம் சென்று, அந்த நூலகத்தைப் பார்வையிட்டேன்.அப்போது அங்கு மக்கள், என்னிடம் பல்வேறு கோரிக்கைகள்,  குறைபாடுகளை  எடுத்துரைத்தார்கள். இனி மேலாவது இந்த நூலகத்தைப் பராமரிப்பதை அரசியல் ஆக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பல்வேறு உயர்ந்த  படிப்புகளைப் பயில்பவர்கள்  பயன்பெறும் வகையில் இந்த நூலகம் அமைந்திருக்கிறது.  உலகத்திலேயே மிகச் சிறந்த நூலகமாக எல்லோராலும்   போற்றப்படுகிற நூலகமாக  இந்த நூலகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, இனியாவது இந்த அரசு, அண்ணா நூலகத்தைப் பராமரிப்பதில் அரசியல் செய்யாமல், நூலகத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அண்ணா நூலகத்தின் உறுப்பினரானார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு’ சென்று தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொண்டார். மேலும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். தொடர்ந்து அவர் நூலகத்தை சுற்றி பார்த்தார். அப்போது அங்கிருந்தவர்கள் மு.க.ஸ்டாலினுடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். அவருடன் அ.ராசா, எ.வ.வேலு, மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் சென்றனர்.

Related Stories: