வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்: 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்வது நீடிக்கும். குறிப்பாக 9 மாவட்டங்களில் மிககனமழையும், 19 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான இடங்களில் பெய்து வந்த மழை நேற்று முன்தினம் இரவு முதல் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அரபிக் கடல், வங்கக் கடல் இரண்டிலும் காற்றழுத்தங்கள் சமமாக உருவாகி ஈரப்பதத்தை உறிஞ்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளாக மா றியுள்ளது. இதனால், தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மற்ற மாவட்டங்களில் முறையே மிக கன மழை, கனமழை என்று பெய்து வருகிறது. அதிகபட்–்சமாக நேற்று பெய்த மழையில் பாம்பன், மண்டபம் 180 மிமீ பதிவாகியுள்ளது. ராமேஸ்வரம் 170 மிமீ, காரைக்கால், புதுக்கோட்டை, அறந்தாங்கி 110 மிமீ, சேலம் 100 மிமீ, மாமல்லபுரம், பெருங்காவூர், பெருஞ்சாணி 90மிமீ, தரங்கபாடி 80மிமீ, பரமத்தி வேலூர் 70மிமீ, பவானி, பரமக்குடி, திருமயம், பூந்தமல்லி, திருவாடணை 60மிமீ, தர்மபுரி, திருப்பத்தூர், பேச்சிப்பாறை, காரைக்குடி, 50மிமீ மழை பெய்துள்ளது. சென்னையிலும் சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளில் 20 மிமீ முதல் 40மிமீ வரை மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் புதியதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலி–்ல் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா பகுதிக்கு செல்லும். தற்போது அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி விஜயவாடா- நெல்லூர் ஒட்டிய கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவாடணை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். சென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

இதற்கிடையே, அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று வருவதால், மத்திய அரபிக் கடல் பகுதியில் புயல் உருவாகும் சூழ்நிீலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமானுக்கு தெற்கு கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னையை ஒட்டிய கடலோரப் பகுதிக்கு நெருங்கி வர இரண்டு நாட்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த காற்றழுத்தம் கடலோரப் பகுதிக்கு வரும் போது தமிழகத்தில் மேலும் மழை தொடர்ச்சியாக பெய்யும். அரபிக் கடல், வங்கக் கடல் ஆகிய இரண்டிலும் காற்றழுத்தங்கள் நீடிப்பதை அடுத்து குமரிக்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதேபோல சென்னை, புதுச்சேரி கடலோரப் பகுதி மீனவர்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: