நிதிபற்றாக்குறை அதிகரிக்கும் சூழல் தமிழக தலைமை செயலாளர் வணிக வரித்துறைக்கு எச்சரிக்கை: இணை ஆணையர் மண்டல அலுவலகங்களில் நேரில் ஆய்வு

சென்னை: வணிகவரித்துறையில் வரிவருவாய் குறைவால் நிதிபற்றாக்குறை அதிகரிக்கும் சூழல் உருவாகும் என்று தலைமை செயலாளர் வணிகவரித்துறை கமிஷனருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்குகள் சேவை வரி கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதில் இருந்து வரி வருவாய் இலக்கை அடைய முடியாமல் அதற்காக இழப்பு தொகையாக மத்திய அரசிடம் இருந்து தமிழக  அரசு பெற்று வருகிறது. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் கடந்த 14ம் தேதி செய்தி வெளியானது.இதை தொடர்ந்து தலைமை செயலாளர் சண்முகம் வணிகவரித்துறை கமிஷனர் சோமநாதன் உடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த  ஆலோசனையின் போது,தலைமை செயலாளர், வரிவருவாய் குறைந்து ஏன் என்றும், வருவாய் குறைந்தால் நிதிபற்றாக்குறை அதிகரிக்கும் சூழல் உருவாகும் என்று கமிஷனரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, பொருளாதார மந்த சூழ்நிலை  காரணமாக வரி வருவாய் குறைந்ததாக கமிஷனர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, தலைமை செயலாளர் வரிவருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷனர் ஒவ்வொரு மண்டலமாக நேரில் ஆய்வு செய்ய  வேண்டும். மேலும், கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு வருவாயை குறைந்தது காரணம் என்பதை ஆய்வு செய்து பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரும் 6 மாதங்களில் வருவாய் இலக்கு எட்ட உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் கமிஷனருக்கு அறிவுரை வழங்கியதாக வணிகவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: