வங்கி ஊழியர்கள் போராட்டம் 15,000 கோடி ‘செக்’ பரிவர்த்தனை முடங்கியது

* பணம் டெபாசிட், எடுத்தல் பணிகளும் கடும் பாதிப்பு * வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

சென்னை: வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியா முழுவதும் ₹15,000 கோடிக்கு காசோலை பரிவர்த்தனை முடங்கியது. பணம் டெபாசிட், எடுத்தல் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றப்படும் என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு வங்கி அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் உள்பட அனைத்து  தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள்  சங்கம்(ஏஐபிஇஏ), இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு(பி.இ.எப்.ஐ) அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சம் வங்கி ஊழியர்கள்  பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 40,000 வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால், நாடு முழுவதும் நேற்று  வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது.சென்னையை  பொறுத்தவரை வங்கிகள் அனைத்தும் திறந்திருந்தன. ஆனால், பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.

அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். அதிகாரிகள் வந்திருந்தாலும் ஊழியர்கள் இல்லாததால் எந்தவித பணிகளும், அதாவது பணம்  டெபாசிட், பணம் எடுத்தல், செக் பரிமாற்றம் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறவில்லை. வங்கிகள் திறந்திருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் வழக்கம் போல வங்கிகளுக்கு வந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.  வங்கிகள் திறந்திருந்தும் எந்த சேவையும் நடைபெறாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய காட்சியை பல இடங்களில் காண முடிந்தது. சென்னையை பொறுத்தவரை வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களில் வங்கி ஊழியர்கள் தான் பணத்தை நிரப்புவது வழக்கம். வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் நேற்று பணம் நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டது. பிற்பகலில் ஏடிஎம்களில் பணம்  இல்லாத நிலை தான் காணமுடிந்தது.

வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஏ.கே.நாயக் பவனில் நேற்று காலை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தின் போது அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்(ஏஐபிஇஏ) பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:வங்கிகள் இணைப்பு என்ற முடிவு தவறானது. இது மோசமான நிலைக்கே வங்கிகளை கொண்டு செல்லும். வங்கிகளை மூடுவதால் நாட்டிற்ேகா, சாதாரண மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது.

பெரும் முதலாளிகளுக்கே உதவும்  நிலைமை ஏற்படும். இந்தியாவில் விவசாய துறையிலும், மற்ற துறையிலும், சிறு- குறுந்தொழிலும் நெருக்கடியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் வங்கிகளே தொடங்க வேண்டும். பெரும் வங்கிகளாக மாற்றி, பெரும்  முதலாளிகளுக்கு மட்டுமே உதவும் வங்கியாக மாற்ற கூடாது. வங்கிகளில் இப்போது 15 லட்சம் கோடி வராக்கடன் உள்ளது. வங்கிகள் இணைப்பால் வராக்கடன் வசூலிப்பு திசை திருப்பப்படும். வராக்கடன் வசூலிக்கவில்லை என்று சொன்னால்,  புதிய கடனை கொடுக்க முடியாது. அதிக அளவு கிளைகளை திறக்க வேண்டும். வங்கிகள் இணைப்பால் பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள். வங்கி ஊழியர்களின் ஒரு நாள் போராட்டத்தால் சென்னை பரிவர்த்தனை  நிலையத்தில் 5 ஆயிரம் கோடி அளவுக்கு 7 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனைக்கு செல்லாமல் வங்கிகளிலேயே முடங்கி கிடக்கிறது. இந்தியா முழுவதும் 15,000 கோடி அளவுக்கு 20 லட்சம் காசோலைகள் முடங்கியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: