சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி கல்லூரி மாணவனிடம் 1.50 லட்சம் மோசடி : தயாரிப்பாளர் மகனுடன் கைது

சென்னை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசைக்காட்டி, கல்லூரி மாணவனிடம் ரூ.1.50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், போலீசார் சினிமா தயாரிப்பாளரை மகனுடன் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன் (55), சினிமா பட தயாரிப்பாளர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் கவித்ரன் (20) கல்லூரியில் படித்து வருகிறார். இவர், தன்னுடன் படிக்கும் சக மாணவர்களிடம் “எனது தந்தை ‘ரூட்டு’ என்ற திரைப்படம் தயாரித்து வருகிறார். அந்த படத்தில் வாய்ப்பு வாங்கி தருகிறேன்” என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி சின்ன சேலம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற மாணவன் “சினிமாவில் எனக்கு வாய்ப்பு வாங்கி தரமுடியுமா” என கேட்டுள்ளார். இதையடுத்து, அவனை தனது தந்தையிடம் கவித்ரன் அழைத்து சென்று பேசியுள்ளார். அப்போது கண்ணன், “சினிமாவில் நடிக்கவேண்டும் என்றால் ஒன்றரை லட்சம் தரவேண்டும்” என கூறியுள்ளார்.

இதற்கு ஒப்புக்ெகாண்ட மூர்த்தி, கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றரை லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் மாணவன் இதுகுறித்து கண்ணனிடம் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த கண்ணன், நாங்கள் அழைத்தால் மட்டுமே இங்கு வரவேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார். உடனே மூர்த்தி, எனக்கு சினிமாவில் வாய்ப்பு வேண்டாம். நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவன் மூர்த்தி சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தபோது, கண்ணன், தனது மூத்த மகன் நிகமித்ரன் மற்றும் இளைய மகன் கவித்ரன் மூலம் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேர் மீதும் மோசடி, கூட்டுச்சதி, ெகாலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தயாரிப்பாளர் கண்ணன் அவரது இளைய மகன் கவித்ரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நிகமித்ரனை தேடி வருகின்றனர்.

Related Stories: