சென்ட்ரல் பகுதியில் 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் : கேரள வாலிபர் பிடிபட்டார்

தண்டையார்பேட்ைட: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் (33), வியாபார விஷயமாக கடந்த 19ம் தேதி கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்தார். சென்ட்ரலில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, இவர் தனது நண்பர் அப்துல் மஜீத்துடன் தங்கசாலை பகுதியில் பொருட்களை வாங்கிக்கொண்டு ஒரு ஆட்டோவில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். பின்னர் ஆட்டோவை விட்டு இறங்கிய பிறகு, தனது கையில் வைத்திருந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பையில் 2 லட்சம் மற்றும் ஒரு லேப்டாப் இருந்ததாகவும், அதை ஆட்டோவில் இருந்து இறங்கியபோது எடுக்க மறந்துவிட்டதாகவும்  கூறியிருந்தார்.

யானைகவுனி இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்கு பதிவு செய்து அவர் ஆட்டோ ஏறிய இடம், இறங்கிய இடம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஏரிக்கரையை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய ஆட்டோ என்று தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த ஆட்டோ டிரைவரின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு காவல்நிலையம் வரும்படி அழைத்தனர். அவர் காவல் நிலையம் வந்து, அந்த பையை கொடுத்தார். அந்த பையை பரிசோதித்து பார்த்ததில் 75 லட்சம் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணம் இன்றி 75 லட்சம் இருப்பதை மறைத்து 2 லட்சம் என்று கூறியதால், அது ஹவாலா பணம் என்று தெரியவந்தது. இதையடுத்து யானைகவுனி போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அந்த வாலிபரையும் 75 லட்சத்தையும் ஒப்படைத்தனர். இதுகுறித்து கேரள வாலிபரிடம், வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: