தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா : டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து முன்னிலை

ராஞ்சி: தென் ஆப்ரிக்க அணியுடனான 3வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா, 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி சாதனை படைத்தது. ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ரோகித் ஷர்மா 212, அஜிங்க்யா ரகானே 115, ஜடேஜா 51, சாஹா 24, உமேஷ் 31 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. ஹம்சா 62, பவுமா 32, லிண்டே 37 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர் (2 பேர் டக் அவுட்). இதையடுத்து, 335 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்திருந்தது.

டி புருயின் 30 ரன், நோர்ட்ஜே 5 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். டி புருயின் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் நதீம் சுழலில் விக்கெட் கீப்பர் சாஹா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த லுங்கி என்ஜிடி தான் சந்தித்த முதல் பந்தையே ஓங்கி அடித்தார். அது எதிர் முனையில் இருந்த பேட்ஸ்மேன் நோர்ட்ஜேவின் இடது மணிக்கட்டில் பட்டு எகிறியது. பந்துவீச்சாளர் நதீம் பதற்றப்படாமல் அதை பிடித்து என்ஜிடியை வெளியேற்ற, தென் ஆப்ரிக்கா 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (48 ஓவர்). நோர்ட்ஜே 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று இரண்டே ஓவரில் ஆட்டம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் ஷமி 3, உமேஷ், ஷாபாஸ் நதீம் தலா 2, ஜடேஜா, அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 202 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் ஷர்மா தட்டிச் சென்றார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 40 புள்ளிகளை பெற்ற இந்திய அணி, மொத்தம் 240 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது (5 டெஸ்டில் 5 வெற்றி).

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என வென்றுள்ளது. மீண்டும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அடுத்து வங்கதேச அணியுடன் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி டெல்லியில் நவம்பர் 3ம் தேதியும், 2வது போட்டி ராஜ்கோட் (நவ. 7), 3வது போட்டி நாக்பூரில் (நவ. 10) நடைபெறும். டெஸ்ட் போட்டிகள் இந்தூர் (நவ. 14-18), கொல்கத்தாவில் (நவ. 22-26) நடைபெற உள்ளன. வங்கதேச வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அந்த அணியின் இந்திய சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகி உள்ளது. எனினும், இந்த தொடர்கள் திட்டமிட்டபடி நடக்கும் என பிசிசிஐ புதிய தலைவர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: