×

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் குப்பைக்கு தனி தொட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வேலூர்: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் சாதாரண குப்பை தொட்டிகளுடன், மக்கா கழிவு பொருட்களான பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு தனித்தனியாக இரண்டு குப்பை தொட்டிகள் வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது அனைத்து கழிவுகளையும் சேகரித்து மொத்தமாக கழிவுகள் சேகரிக்க வரும் ஊழியர்களிடம் வழங்குகின்றனர். அதோடு இப்போது பள்ளிகளில் துப்புரவு பணியாளர்  நியமனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளிகளில் பல்வேறு வகைகளில் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கழிவுகளை தற்போது தனியாக அகற்றாமல் மற்ற பேப்பர் உட்பட மக்கும் தன்மையுள்ள கழிவுகளுடன் சேர்த்தே  சேகரிக்கின்றனர்.
இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் பள்ளிக்கல்வித்துறைக்கு தனியாக அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதன்படி, பள்ளிகளில் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை தனித்தனியாக சேகரித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவில் அனைத்துப்பள்ளிகளிலும் பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு தனித்தனி குப்பை தொட்டிகளை வைத்து பராமரிக்குமாறு  உத்தரவிட்டுள்ளது.



Tags : schools ,Tamil Nadu ,school department ,SC , Separate pots for plastic, electronic garbage in all schools in Tamil Nadu: SC directive
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் ஆர்.டி.ஈ. சேர்க்கை இன்று தொடக்கம்..!!