×

பொன்னேரி அருகே கால்வாய் ஆக்கிரமிப்பால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது: விவசாயிகள் கண்ணீர்

பொன்னேரி: பொன்னேரி அருகே கால்வாய் ஆக்கிரமிப்பால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கண்ணீருடன் கவலையில் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மடிமைகண்டிகை, வீரங்கிமேடு ஆகிய கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். அண்மையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. 2 நாள்  மழைக்கே நெற்பயிர்களை மழைநீர் மூழ்கடித்துள்ளது.  அகரம், லட்சுமிபுரம், தேவராஞ்சேரி, ஏருசிவன், மத்ராவேடு, அரவாக்கம் ஆகிய 6 கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், கால்வாய் வழியாக மடிமைகண்டிகை வந்து பெரும்பேடு ஏரிக்கு செல்ல வேண்டும். இந்த ஏரிக்கு செல்லும் வரத்து  கால்வாய், தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், 6 கிராமங்களின் விளைநிலங்களில் இருந்து வழிந்தோடும் மழைநீர், பெரும்பேடு ஏரிக்கு செல்லாமல், மடிமைகண்டிகை, வீரங்கிமேடு கிராமங்களின் விளைநிலங்களை மூழ்கடிக்கிறது.

 மேலும் மடிமைகண்டிகை மற்றும் வீரங்கிமேடு கிராமங்களின் விளைநிலங்களை ஒட்டியுள்ள மழைநீர் கால்வாய் தூர்ந்தும், ஆக்கிரமிக்கப்பட்டு கிடப்பதால், மடிமைகண்டிகை மற்றும் வீரங்கிமேடு கிராமங்களின் விளைநிலங்களில் தேங்கும்  மழைநீர் வெளியேற வழியின்றி கிடக்கிறது. நடவு செய்து 40 நாட்களே ஆன நிலையில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 2 நாட்களாக நெற்பயிரின் நிலை குறித்து வருவாய் துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். கண்டு கொள்ளவில்லை. குடிமராமத்து பணிகளுக்கு என ஏரியின்  பெயரில் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தங்களது கிராமத்தில் நீர்வடி கால்வாய்களை தூர்வாராமல் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார் வார வேண்டும், 6 கிராமங்களின் மழைநீரால் மடிமைகண்டிகை மற்றும் வீரங்கிமேடு கிராம விளைநிலங்கள் பாழாவதை தடுக்க வேண்டும் என பலமுறை கலெக்டர் முதல் முதல்வர் வரை  விவசாயிகள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சம்பா பருவத்தின்போது மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி அழுகி வீணாகி வருவதும், அதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைவதும் தொடர்கிறது.

ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ள நிலையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இருக்கயில் பயிர்கடனை எப்படி  திருப்பி செலுத்த முடியும். தற்கொலை செய்து  கொள்வதே தீர்வாகுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழைநீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.



Tags : Ponneri ,paddy fields , 300 acres of paddy fields submerged by canal occupation near Ponneri: farmers tears
× RELATED பொன்னேரி அருகே பேருந்தை சிறை பிடித்து பெண்கள் சாலைமறியல்