×

டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி ஈரோடு சினிமா தியேட்டருக்கு சீல் மின்சாரம்,குடிநீர் இணைப்பு துண்டிப்பு: ரூ.2 லட்சம் அபராதம்

ஈரோடு: ஈரோட்டில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த சினிமா தியேட்டருக்கு சீல் வைக்கவும், மின்சாரம், குடிநீர் இணைப்புகளை துண்டித்து, தியேட்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.ஈரோடு மாநகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட நேரு வீதியில் கலெக்டர் கதிரவன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் டெங்கு காய்ச்சல் தடுப்பு  நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒரு வீட்டில் ஆய்வுக்காக சென்றபோது அந்த வீட்டின் உரிமையாளர் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த அதிகாரிகள் அந்த வீட்டின் உரிமையாளர் கதவை திறந்தவுடன் உள்ளே சென்று பார்த்தபோது குடிநீர்  குழாயில் மின்மோட்டார் வைத்து தண்ணீரை எடுத்தது தெரிய வந்தது. மேலும் அங்கு கொசுப்புழுக்கள் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்  விதிக்கப்பட்டதுடன் மின்மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில் மூடப்பட்ட நிலையில் இருந்த தியேட்டரில் கலெக்டர் கதிரவன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகராட்சி நகர்நல அலுவலர்  சுமதி, சுகாதார அலுவலர் முகமதுஇக்பால், சுகாதார ஆய்வாளர்கள் நல்லசாமி, தத்தாரு மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தியேட்டரில் பல இடங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் அதிகமாக இருந்தது. இதனால் கோபமடைந்த கலெக்டர் கதிரவன், அங்கிருந்த நகர்நல அலுவலர் சுமதியை அழைத்து இந்த ஒரு இடத்திலேயே இவ்வளவு கொசுப்புழுக்கள் இருக்கிறது. நீங்கள்  என்ன செய்கிறீர்கள்?. இதை கூட பார்க்காமல் வேறு என்ன வேலை செய்கிறீர்கள்? என கேட்டார். பதில் அளிக்காமல் நின்று கொண்டிருந்த நகர்நல அலுவலர் சுமதியிடம் வேலை பார்க்க விருப்பமில்லையென்றால் நீங்களே சென்று விடுங்கள். இல்லையென்றால் உங்கள் இடத்திற்கு வேறு ஒருவர்தான் பணியில் இருப்பார் என்றார்.

பின்னர் ஆணையாளர் இளங்கோவனிடம் இவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்றார். தியேட்டரின் உள்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது தியேட்டரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து தியேட்டரின் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை துண்டித்து, 2 லட்சம் ரூபாய் அபராதம்  விதித்து, தியேட்டருக்கு சீல் வைக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். இதன்படி அதிகாரிகள் தியேட்டருக்கு சீல் வைத்தனர்.

Tags : Dengue Mosquitoes , Dengue mosquito breeding grounds sealed with Erode Cinema Theater
× RELATED சென்னையில் டெங்கு கொசுக்களை அழிக்க...