குமரியில் தொடரும் பருவமழை: சிற்றாறு அணையில் உபரிநீர் திறப்பு...வெள்ள அபாய எச்சரிக்கை

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் சிற்றாறு 1, 2 ஆகிய அணைகள் நேற்று இரவு 16 அடியை கடந்தன. இன்று காலை சிற்றாறு அணைகளுக்கு 243 கன அடி நீர்வரத்து இருந்தது. சிற்றாறு 1ல்  16.10 அடியாகவும், சிற்றாறு 2ல் 16.20 அடியாகவும் நீர்மட்டம் காணப்பட்டது. இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு சிற்றாறு 1ல் இருந்து 273 கன அடி தண்ணீர் மறுகால் ஷட்டர்கள் வழியாக திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கடையாலுமூடு வழியாக கோதையாற்றில் கலந்து பெருக்கெடுத்து பாய்கிறது. இதனால் திற்பரப்பு அருவியும் கலங்கிய நிலையில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: