பிளாட்பாரங்களில் நிற்க முடியாமல் தவிப்பு: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் மாடுகள்

நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மாடுகள் தொல்லையால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 30க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களும், வாராந்திர சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.  திருவனந்தபுரம் கோட்டத்தில் அதிக வருமானம் தரும் ரயில் நிலையங்களில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையமும் முதன்மையான இடத்தில் உள்ளது. ஆனால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை  வசதிகள் இல்லை. போதிய கழிவறை வசதிகள் கூட இல்லாமல் பயணிகள் திண்டாடி வருகிறார்கள்.

இந்த ரயில் நிலையத்தில் சமீப காலமாக மாடுகள் தொல்லையும் அதிகரித்துள்ளது. பிளாட்பாரங்களில் தஞ்சம் அடையும் மாடுகளால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். ரயிலுக்காக நிற்கும் பயணிகளை மாடுகள் விரட்டுவதும்  வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர். பயணிகள் வைத்துள்ள உடமைகளையும் மாடுகள் சேதப்படுத்துகின்றன. ரயில் நிலைய பிளாட்பாரங்களில் மாடுகள் சர்வ சாதாரணமாக உலா வருவது  பயணிகளை வேதனை அடையவும் செய்துள்ளது.

குறிப்பாக 2, 3 பிளாட்பாரங்களில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இது குறித்து பலமுறை ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று பயணிகள் கூறுகிறார்கள். ரயில்  நிலையங்களுக்குள் அத்துமீறி விடப்படும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கலாம். மாநகராட்சியிடம் கூறி மாடுகளை பிடித்து கோசாலையில் கொண்டு விடலாம். ஆனால் ரயில்வே நிர்வாகம் மற்றும் போலீசார்  எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் பயணிகளின் நலனில் அக்கறை இல்லாதவர்களாக உள்ளனர். பிளாட்பாரங்களில் மாடுகளின் சாணத்தை பயணிகளே சுத்தம் செய்யும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை  எடுத்து மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: