ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இன்று கடைகள் இடித்து அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

நெல்லை: நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இன்று ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு ஓரிரு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் கடந்த நவம்பர் மாதம் மூடப்பட்டது. பிளாட்பாரம்களில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டு பஸ் நிலைய வளாகத்திற்குள் பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. இதையொட்டி  அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தை சுற்றி வந்து சென்றன. இந்நிலையில் பஸ்கள் வருவதை தடை செய்தால் மட்டுமே ஸ்மார்ட் சிட்டி பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த வாரம் பொருட்காட்சி திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் இன்று பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடைகள் இடித்து அகற்றப்பட்டன. பாரதியார்  சிலைக்கு நேர் எதிர்புறம் உள்ள கடைகளும், இடதுபுறம் உள்ள கடைகளும் இடித்து அகற்றப்பட்டன. நெல்லை மாநகராட்சி செயற்பொறியாளர்கள் பாஸ்கர், நாராயணன், தச்சை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி வருவாய் அதிகாரி தங்கபாண்டி, உதவி பொறியாளர் அருள் மற்றும் மாநகராட்சி  ஊழியர்கள் ஜேசிபி, லாரி சகிதம் வந்து கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

அப்போது ஓரிரு கடைக்காரர்கள் தங்களது கடையில் உள்ள பொருட்களை வெளியே எடுக்க காலஅவகாசம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் ஏற்கனவே முறைப்படி  நோட்டீஸ் ஒட்டப்பட்டு அவகாசம் அளிக்கப்பட்டு விட்டதென கூறி கடைகளை இடிக்க தொடங்கினர். இதனால் அந்த இரு கடைக்காரர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கடையில் இருந்த பொருட்களையும் கடைக்காரர்கள்  வீசியெறிந்தனர்.அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து அங்கிருந்து வெளியேற்றினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில மொத்தம் 126 கடைகள் அகற்றப்பட உள்ளன. இதில் 23 கடைகள் மட்டும் கோர்ட்டில் தடை ஆணை வரும் நவம்பர் 3ம்தேதி வரை பெற்றுள்ளனர். மீதமுள்ள 103  கடைகளையும் முழுமையாக அகற்றி வருகிறோம். அதன் பின்னர் பணிகள் தொடங்கும் என்றனர்.

Related Stories: