மணப்பாடு கருமேனியாற்றில் பரபரப்பு: பல ஆண்டுகளுக்கு முந்தைய அம்மன், சுவாமி சிலைகள் மீட்பு

உடன்குடி: நமது முன்னோர்கள் சிறந்த பக்திமானாக இருந்துள்ளனர். பொதுவான கோயில்கள் மட்டுமின்றி தாங்கள் வழிபட குடும்ப கோயில்களையும் நிறுவி உள்ளனர். காலப்போக்கில் அவைகள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனதால் வெளி  உலகிற்கு தெரியாமல் போயிற்று. ஆனால் ஒரு சில இடங்களில் சிலைகள் வெளியில் தெரிந்து கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.இதுபோன்று நீரில் மூழ்கி கிடந்த சிலைகள் இப்போது வெளியில் தெரியவந்து மீட்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம்:

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் கருமேனியாறு கடலில் கலக்கும் இடம் உள்ளது. இந்த ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் பாய்ந்தோடி இறுதியில் கடலில் கலக்கிறது. நேற்று மாலை மணப்பாடு பாலம் வழியாக  சென்ற பொதுமக்கள் ஆற்றில் ஏதோ யாரோ கைகளை உயர்த்திக்கொண்டு நிற்பது போன்ற காட்சியை பார்த்தனர். நீண்டநேரம் ஆகியும் அதில் இருந்து எந்த அசைவும் இல்லை. இதனால் என்னவோ...ஏதோவென்று அங்கு வேடிக்கை பார்க்கும்  கூட்டம் அதிகமாகிவிட்டது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் மணப்பாடு விஏஓ நடராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் ஆற்றிற்கு விரைந்து வந்தார். இதைத்தொடர்ந்து போலீசாரும் அங்கு வந்தனர். ஆற்றில் இறங்கி வெளியில் நீட்டிக்கொண்டிருந்த கைகளை தொட்டு  பார்த்தனர். அப்போது அவைகள் சிலைகள் என தெரியவந்தது. இதையடுத்து அங்கு மூழ்கி கிடந்த 7 சிலைகளை எடுத்து வெளியே கொண்டுவந்தனர். இதில் கருப்பசாமி, சுடலைமாடன், அம்மன் என பலவித சுவாமிகளின் சிலைகள் இருந்தன. அவை சிமென்டினால் செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே சிலைகள் இங்கு இருந்திருக்ககூடும் என்று தெரிகிறது. காரணம் அனைத்து  சிலைகளும் நன்றாக பாசிபிடித்து போய் உள்ளது.

மீட்கப்பட்ட சிலைகளை போலீசார் உடன்குடி வருவாய்துறையினரிடம் ஒப்படைத்தனர். தற்போது அந்த சிலைகள் ஆர்ஐ அலுவலகத்தில் பாதுகாப்பாக உள்ளது.வழக்கமாக கோயில்களில் சிதைந்த சிலைகள் எதுவும் இருந்தால் அதை அங்கு வைத்து வழிபடமாட்டார்கள். புதிதாக வேறு சிலைகள் செய்துதான் வழிபடுவார்கள். சேதமான சிலைகளை ஆறு, கடல், குளம், உள்ளிட்ட நீர்நிலைகளில்  போட்டுவிடுவார்கள். இதுதான் நடைமுறையில் உள்ள வழக்கம். ஆனால் இப்போது கருமேனியாற்றில் கிடைத்துள்ள 7 சிலைகளும் எந்தவித சேதமுமின்றி பதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு முன் இந்த ஆறு மணல் மேடாக  இருந்திருக்ககூடும் என்றும் இங்கு சிலைகளை வைத்து வழிபட்டிருக்ககூடும் என்றும், காலப்போக்கில் ஆற்றில் நீர்வரத்து இருந்ததால் அந்த சிலைகளை அவர்கள் அப்புறப்படுத்தாமல் சென்றிருக்ககூடும் என தெரிகிறது.

வரலாற்று ஆய்வாளர்கள் அந்த சிலைகளை ஆய்வு செய்தால் அவைகள் எப்போது உள்ள சிலைகள் என தெரிந்துவிடும். கருமேனியாறு கடலில் கலக்கும் இடம் என்பதால் கடல் நீரும், ஆற்று நீரும் சேர்ந்து எப்போதும் இங்கு ஒரு ஆள்  ஆளத்திற்கு தேங்கி நிற்குமாம். தாமிரபரணி ஆறுபோன்ற இங்கும் எப்போதும் தண்ணீர் வற்றுவதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த இடத்தில் யாரும் குளிக்கவும் மாட்டார்களாம். ஆற்று நீருக்குள் சிலைகள் கிடைத்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: