உள்ளாட்சி தேர்தலையும் புறக்கணிப்போம்: தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் அறிவிப்பு

நாங்குநேரி: நாங்குநேரி இடைத்தேர்தலை போன்று அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலையும் புறக்கணிப்போம் என தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர் அறிவித்துள்ளனர். ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி அரசாணை வெளியிடாததை கண்டித்து பருத்திக்கோட்டை நாட்டார்கள் சங்கம் சார்பில் நாங்குநேரி இடைத்தேர்தல் புறக்கணிப்பு மற்றும் கறுப்புக் கொடி ஏற்றி  போராட்டங்கள் நடத்தப்பட்டது.  மேலும் நேற்று நடந்த இடைத்தேர்தலில் அந்த சமுதாயத்தினர் வசிக்கும் கிராமத்தில் உள்ளவர்கள் யாரும் வாக்களிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகவில்லை.

நேற்று காலை தேர்தல்  புறக்கணிப்பில் ஈடுபட்ட கிராமத்தினர் அனைவரும் வழக்கம்போல தங்களது வயல்களுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர்.  இதனால் உன்னங்குளம், ஆயர்குளம், இளையார் குளம், கடம்பன்குளம் உள்பட 134 கிராமங்களைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர்கள் வாக்களிக்க வரவில்லை. மேலும் அங்கு தொடர்ந்து கறுப்பு கொடிகளும், தேர்தல் புறக்கணிப்பு  பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் பறக்கும் படை கண்காணிப்பாளர்கள், போலீஸ் அதிகாரிகள் கிராமங்களை தொடர்ந்து நாள் முழுவதும் கண்காணித்து வந்தனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: