விகேபுரம் அருகே இன்று அதிகாலை பரபரப்பு: கிராமத்தில் புகுந்து 4 ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தை...பொதுமக்கள் அச்சம்

வி.கே.புரம்: விகேபுரம் அருகே இன்று அதிகாலை கிராமத்தில் புகுந்து 4 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மிளா, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவைகள் அடிக்கடி மலையில் இருந்து இறங்கி கிராமங்களில் நுழைந்து  விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் சிறுத்தையும் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை அடித்துக் கொன்று இழுத்துச்சென்று விடுகிறது. நேற்றும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்டது வேம்பையாபுரம் காலனி. இக்கிராமம் மலையடிவாரத்தில் உள்ளது.

இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருவதோடு, வீட்டில் ஆடு, மாடுகளும்  வளர்த்து வருகின்றனர். இந்த ஊரைச்சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவரது கணவர் 20 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது ஒரே மகன் மாரியப்பன் (35). இவருக்கு திருமணமாகி பக்கத்து தெருவில் வசிக்கிறார். மாரியப்பனுக்கு ஒரு  மகள், 2 மகன்கள். இவரது மனைவியும் 13 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். அதோடு மாரியப்பன் விபத்து ஒன்றில் சிக்கி கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு நடக்க முடியாமலும் சாப்பிட முடியாமலும் சிரமப்பட்டு வருகிறார்.

வேலைக்கு எதுவும் செல்லமுடியாததால் தனது மகன்,  பேரக்குழந்தைகளை பாட்டி வள்ளியம்மாள்தான் பராமரித்து வருகிறார். இதனால் வருமானத்திற்காக வள்ளியம்மாள் தனது வீட்டில் 4 ஆடுகள் வளர்த்து வந்தார். அவ்வப்போது விவசாய  கூலி வேலைக்கும் செல்வதுண்டு. நேற்றிரவு மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய 4 ஆடுகளை வீட்டையொட்டி உள்ள தொழுவத்தில் கட்டி போட்டிருந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் சிறுத்தை ஒன்று அங்கு வந்தது. பின்னர் கட்டி போட்டிருந்த 4 ஆடுகளை ஒன்றன்பின்  ஒன்றாக கழுத்தை கடித்து ரத்தத்தை குடித்தது. அதன்பின்னர் ஒரு ஆட்டின் பாதி உடலை மட்டும் கடித்து தின்று விட்டு மீண்டும் வந்த வழியாக சென்று விட்டது. இன்று காலை வள்ளியம்மாள் பார்த்தபோதுதான் ஆடுகள் கடித்து குதறப்பட்டு சாகடிக்கப்பட்டிருப்பது பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் சிறுத்தை வந்ததற்கான கால்தடங்களும் அங்கு பதிந்திருந்தன.

 இதுகுறித்து பாபநாசம் வனத்துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. வனவர் மோகன் தலைமையில் வனத்துறையினர் வந்து சம்பவ இடத்தை பார்த்தனர். அவர்களிடம் வள்ளியம்மாள், எனது கணவர் இறந்து விட்டதால், இந்த ஆடுகளை வைத்துதான் பிழைத்து வந்தேன். இப்போது  அதையும் பறிகொடுத்து விட்டேன். எனக்கு நஷ்டஈடு பெற்று தர உதவ வேண்டும் என்று கண்ணீர் வடித்தார். மீண்டும் சிறுத்தை வராமல் இருக்க இப்பகுதியில் கூண்டு வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாய் வளர்க்க மக்கள் அச்சம்:  மற்ற இடங்களைப்போல் இங்குள்ள மக்களும் ஆர்வத்துடன் நாய் வளர்த்து வந்திருக்கிறார்கள். அவைகள் இரவுநேரத்தில் தெருக்களை சுற்றிவரும். இப்படி ஆசை, ஆசையாக வளர்த்த நாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக காணாமல் போனவண்ணம்  இருந்தன. சில மாதங்களில் ஒட்டு மொத்த நாய்களும் மாயமாகிவிட்டது. கடைசியில்தான் அவர்களுக்கு நாய்களை சிறுத்தைதான் சுவாகா செய்துள்ளது என தெரியவந்தது. அதன்பிறகு யாரும் நாய் வளர்ப்பதில்லை.

Related Stories: