ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை டெப்போ சுவர் இடிந்து விழுந்ததில் 10 பஸ்கள் சேதம்...பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் அரசு போக்குவரத்து கழக டெப்போ சுவர் இடிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்துள்ளன.வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. கடலில் மணிக்கு 50 கிமீ வேகம் முதல் 65 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடலில் சீற்றம் அதிகம் காணப்படும். இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வரை மழை நீடித்ததால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. ராமநாதபுரத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதில் நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அரசு டெப்போவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்றிரவு சர்வீசை முடித்து விட்டு டெப்போவில் வழக்கம் போல் பஸ்கள் நிறுத்தப்பட்டன. விடிய விடிய பெய்த மழையால் டெப்போவில் சுற்றுச்சுவர் திடீரென அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. இடிபாடுகள் விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்து விட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டன. இது தொடர்பாக துறைரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பஸ்கள் சேதமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டெப்போவில் நடத்துனர், ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் கட்டிடத்தின் தன்மையை ஆராய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  நேற்று இரவு முதல் இன்று காலை வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் சராசரியாக 68.85 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாம்பனில் 183 மிமீ, மண்டபத்தில்் 176.90 மிமீ, தங்கச்சிமடத்தில் 168.30 மிமீ மற்றும் ராமேஸ்வரத்தில் 165.10 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories: