மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது அல்ல: ஐகோர்ட் கருத்து

சென்னை: மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதால் கூட்டாட்சி கொள்கைக்கு பாதிப்பில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரை மத்திய அரசு 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர் ரவி என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஜம்மு காஷ்மீரை போல் தமிழகத்தையும் பிரிக்க வாய்ப்புள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இரு அவைகளிலும் நிறைவேற்றினார். அதனையடுத்து, அக்டோபர் 31-ம் தேதியிலிருந்து அந்த மசோதா நடைமுறைக்கு வருகிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாகவும், இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதற்கு எதிராகவும் ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் அனைத்தும் விசாரணையில் உள்ளன. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநிலங்களை அம்மாநில அரசின் ஒப்புதல் இன்றி பிரிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது இல்லை எனக் கருத்து தெரிவித்தனர். காஷ்மீரை போல் தமிழகத்தையும் பிரித்துவிடுவார்கள் என்ற சந்தேகம், யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது, மேலும் யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வாய்ப்புள்ளதாக எந்த மாநிலமும் அச்சம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது, ஜம்மு காஷ்மீரை பிரிப்பது தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: