×

பசுமாட்டின் இரைப்பையில் இருந்து அகற்றப்பட்ட 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: கால்நடை மருத்துவர்கள் சாதனைக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு

சென்னை: பசுமாட்டின் இரைப்பையில் அறுவை சிகிச்சை செய்த கால்நடை மருத்துவர்களுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். பசுவிற்கு லாபரோடமி அறுவை சிகிச்சை செய்து 52 கிலோ நெகிழி பொருட்கள் அகற்றப்பட்டதற்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.

பசுமாட்டின் இரைப்பையில் இருந்து அகற்றப்பட்ட 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்


சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்த முனிரத்னம் என்பவரது பசுவிற்கு கடுமையான உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பசுவின் வயிற்றில் வலி ஏற்பட்டதால் அது தன் கால்களை கொண்டு வயிற்றை அடிக்கடி உதைத்துள்ளது. மேலும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க பசு மிகவும் சிரமப்பட்டதை அறிந்த முனிரத்னம் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். பின்பு மேல்சிகிச்சைக்காக வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக மருத்துவமனையில் பசு அனுமதிக்கப்பட்டது. அங்கு பசுவின் வயிற்றில் நெகிழி கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுவது என திட்டமிடப்பட்டது.

இதையடுத்து வெள்ளியன்று காலை 11 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு 4.30 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில் 52 கிலோ எடையுள்ள நெகிழி கழிவுகள் பசுவின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டன. பசுவின் இரைப்பையை 75 சதவிகித நெகிழி கழிவுகள் ஆக்கிரமித்திருந்ததாகவும் அவற்றை அகற்றியது சவாலாக இருந்ததாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். அதில், உணவு மற்றும் பாலுக்கு உபயோகிக்கும் பிளாஸ்டிக் காகிதங்கள் மற்றும் அலுமினியப் படலமும் அடங்கும். அத்துடன் ஊசி, ஊக்கு, ஆணி, திருகாணி, நாணயம் உட்பட பல ஆபத்தான பொருட்களும் அகற்றப்பட்டன.

சிகிச்சைக்குப் பின் தற்போது பசு தண்ணீர் அருந்தி, சாணம் மற்றும் சிறுநீர் கழித்து நல்ல உடல் நலத்துடன் உள்ளது.  தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிகிச்சையியல் துறை இயக்குநர் முனைவர் சி. பாலசுப்பிரமணியன் தலைமையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய அறுவை சிகிச்சைகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், இதற்கு அரசு மருத்துவமனையில் சுமார் 200 ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மனிதர்கள் வீசி எறிந்த நெகிழி கழிவுகளை உட்கொண்டதாலேயே பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நெகிழி கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது மற்ற உயிரினங்களுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பை உணர்த்தும் விதமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

முதல்வர் பழனிசாமி பாராட்டு


இந்நிலையில் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ குழுவினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார். இத்தருணத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பசுவின் உரிமையாளர்
முனிரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Palanisamy ,veterinarians ,Chief Minister , CM Palanisamy, Praise, Greens, Gastroenterology, Veterinarians, Doctors, Adventure, Plastic, Waste
× RELATED “மோடி மேல் இருக்கும் பயத்தை மறைக்க...