மருத்துவமனைகள் தயாராக இருத்தல்.. மருந்துகளை இருப்பு வைத்தல்.. வடகிழக்குப் பருவமழை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்களை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தற்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட திட்டங்களும், அதன் முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  

மேலும், உடனடித் தேவைகள் மற்றும் கூடுதல் உபகரணங்கள், சிறப்புக் கருவிகள் போன்றவை வாங்குவதற்கும் 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், பன்னீர்செல்வம்,  வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சி.சீனிவாசன், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் தங்கமணி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் ஜெயகுமார், அனைத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில்  மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்களை முதல்வர் பழனிசாமி பட்டியலிட்டார்.

*மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், தேங்கிய நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

*மீட்புக்குழு குறுகிய கால அளவில் மழை பாதித்த பகுதியை அடைய  தேவையான  உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும்.

*அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மருந்துகளை இருப்பு வைக்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

*பேரிடர் காலங்களில் பற்றாக்குறையினை தவிர்க்கும் பொருட்டு இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க வேண்டும்.

*வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வயிற்றுப் போக்கு மற்றும் தொற்றுநோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

*அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள  கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

*நீலகிரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கன மழையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படையினரால் பயிற்சி அளிக்கப்பெற்ற 50 வீரர்கள் மற்றும் கூடுதல் தீயணைப்பு வீரர்களை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பவும், மாநிலத்தில், பாதிப்பிற்குள்ளாகக் கூடிய இடங்களில், தேசிய பேரிடர் மீட்புப் படை செல்வதற்கு தயார் நிலையில் இருக்கவும் முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டார்.

Related Stories: