ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரகசிய அறிக்கையாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தேர்தல் ஆணையம்

சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரகசிய அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது. வழக்கின் முக்கியத்துவம் கருதி ரகசிய அறிக்கையாக தாக்கல் செய்வதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆர்.கே நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது இந்த தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அபிராமபுரம் காவல்நிலையத்தில்  வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதில் யார் பேரையும் குறிப்பிடவில்லை.

இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வக்கீல் வைரக்கண்ணன் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதேபோல, தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் கடந்த செப்டெம்பர் 25ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர் முன்பு விசாணைக்கு வந்தபோது, அபிராமபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்த பின்னர், இத்தனை மாதங்களாக தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதேசமயம், பணப்பட்டுவாடா வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். மேலும், மருதுகணேஷ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். அதனடிப்படையில், ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரகசிய அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. ஆணைய நடவடிக்கைகளை வாய்மொழியாக தெரிவிக்க விரும்பாததால் சீலிட்ட கவரில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

Related Stories: