×

மலைமேலே ஒளிரும் சுடர்!

அடையாளம் என்று எதைச் சொல்ல?

செருப்பு அணியாத காலும், எண்ணெய் தேய்க்காத தலையுமாய் காடுகளில் கிழங்குகளைத் தேடிச் சுற்றி திரிவது தான் அந்தக் குழந்தைகளின் அடையாளம் என்று ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களில் இருக்கும் ஊராளியினப் பழங்குடி குழந்தைகளின் அடையாளங்களைச் சொல்லுகிறார் சுடர் நடராஜ். “பிழைப்புத் தேடி காட்டைவிட்டு வெளியே வந்தாலும் செங்கல் சூளையிலும், கரும்பு தோட்டத்திலும் குழந்தை தொழிலாளியாக மாறுகிற சூழல் ஏற்படுகிறது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கக் கல்வி நிலையம் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஆனால் தொடக்கக் கல்விக்கே அந்த குழந்தைகள் பத்து கிலோமீட்டர் நடந்து போக வேண்டி இருக்கிறது” என்கிறார் சுடர் நடராஜ். கடந்த பத்து ஆண்டுகளாக ‘சுடர்’ தொண்டு நிறுவனத்தின் மூலம் குறிப்பாக பழங்குடி குழந்தைகளின் கல்விக்காகக் களத்தில் இருந்து பணியாற்றி வரும் சுடர் நடராஜுடம் பேசினோம்.  “கோபிசெட்டிபாளையத்துக்கு பக்கத்திலே விளாங்கோம்பைன்னு ஒரு மலைக்கிராமம் இருக்குது. 2007லே ஆய்வு பணிக்காக வனத்துறையினர் கூட போயிருந்தேன். விளாங்கோம்பையிலே நாற்பத்திரண்டு ஊராளியின பழங்குடி குடும்பங்கள் இருக்குறாங்க. அந்த ஊருலே இது வரைக்கும் ஒருத்தர் கூட பள்ளிக்கூடம் போனதில்லேன்னு சொன்னாங்க. எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சி.

பள்ளிக்கூடம் போகாம இருக்கிறதுக்கு காரணத்தைக் கேட்டா.. சாப்பாட்டுக்கு உப்பு வாங்கவே காட்டுலே இருந்து பத்து கிலோ மீட்டர் போகணும். நாளு காட்டாரு வேற இருக்குது. வாரத்துக்கு ஒரு தடவைதான் காட்டிலே இருந்து வெளியே போறோம். இதுலே எங்க பள்ளிக்கூடம் போறதுன்னு சொல்றாங்க. ஹாஸ்டல்லே தங்கி படிக்க நாங்க உதவி பண்றோம்னு சொன்னாலும் ஒத்துக்கலை. சரி உங்க குழந்தைங்கள  ஸ்கூலுக்கு வண்டியிலே கூட்டினு போனா அனுப்புவீங்களானு கேட்டோம் கொஞ்சம் பேரு ஒத்துக்கிட்டாங்க. இப்படிதான் 2007 லே பதினஞ்சி குழந்தைகளை வினோபாநகர் நடுநிலைப்பள்ளியிலே சேர்த்தோம்.

1997-ல் பழங்குடிகளோட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு சுடர் நிறுவனம் மூலமா உதவி பண்ணிட்டு இருந்தோம். விளாங்கோம்பையிலே நடந்த சம்பவத்தால தான் திரும்பவும் 2007 லே கல்வி சார்ந்த உதவிகளை ‘சுடர்’ மூலமா பண்ண ஆரம்பிச்சோம். வேற எந்த ஊர்ல எல்லாம் குழந்தைங்க பள்ளிக்கூடம் போகமா இருக்காங்கன்னு கணக்கு எடுத்து பார்த்ததிலே கடம்பூர் தாளவாடி மலைக் கிராமத்திலே மட்டும் 250 குழந்தைகளுக்கு மேல பள்ளிக்கூடம் போகாம குழந்தைத் தொழிலாளரா இருந்தாங்க. இந்த செய்திய மாவட்ட நிர்வாகத்துக்கிட்டே சொல்லி குழந்தைகளை மீட்டோம்.

பதினாலு வயசுக்குக் கீழே மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளருக்கு தொண்டு நிறுவனங்கள் துணையோட தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்திலே  கல்வி வழங்கி வர்றாங்க. இந்தத் திட்டத்திலே சுடர் தொண்டு நிறுவனமும் எட்டு பள்ளிக்கூடத்தை நடத்த ஈரோடு கலெக்டர் 2009 ல அனுமதி தந்தாரு. இப்போ ஜே.ஆர்.எஸ்.புரம், ஒரத்தி, வைத்தியநாதபுரம் நகலூர், திக்கரை பகுதிகள்லே பள்ளிக்கூடம் நடத்திட்டு இருக்கிறோம். மதியச் சாப்பாடு, புத்தகம், ஊக்கத் தொகைனு அரசாங்கமே வழங்குறாங்க. ஆசிரியர்கள்தான் குழந்தைகளை பள்ளிக்கூடம் வர வைக்கணும். அப்புறம் பர்கூர் மலைப்பகுதியிலேயும் கணக்கெடுத்து எட்டு பள்ளிக்கூடத்தைத் திறந்தோம்.

எப்படியாவது குழந்தைகளை பள்ளிக்கூடம் போக வைக்கணும் என்கிற நோக்கத்திலேதான் சுடர் தொண்டு நிறுவனம் இயங்கிட்டு இருக்குது. சிறுதொழில் பண்ணிட்டு காடு மேடுகள்லே சுத்திட்டு இருக்கிற குழந்தைகளை பள்ளிக்கூடம் வர வைக்கிறது பெரிய சவாலான பணியா இருக்கு. அந்த குழந்தைகளுக்கு எழுதப் படிக்கதான் தெரியாதே தவிர குழந்தைகளோட மற்றத் திறன்களை கல்வியோட ஒப்பிட முடியாது. அதனால தினமும் புது புது யுத்தியிலே பாடம் சொல்லிக்கொடுத்தோம். கற்றுக்கொடுக்குறதும் கற்றுக்கிறதும் ஆசிரியரோட பண்புன்னு கள அனுபவத்திலே தான் கத்துக்கிட்டோம்.
 
பாடபுத்தகத்தைத் தாண்டி வகுப்பறையத் தாண்டி பாடல், எண் விளையாட்டு, பல்லாங்குழி, கதை சொல்லல், ஓரகாமி எனும் காகிதக்கலை, கோடை முகாம், களத்து மேட்டுல பாடம் சொல்லிக்கொடுக்கிறதுன்னு நிறைய உத்திய பயன்படுத்தி பாடம் சொல்லிக்கொடுத்தோம். அப்புறம் சத்துணவுக்கு அரசு வழங்குற பணம் போதுமானதா இல்லை. அதனாலே நாங்க நடத்துற பள்ளிக்கூட வளாகத்திலே இயற்கைமுறை காய்கறி தோட்டத்தை உருவாக்குனோம். குழந்தைகளே அந்தத் தோட்டத்தை பராமரிக்கச் சொல்லிக் கொடுத்தோம். இதன் மூலமா உழைப்போட மகத்துவத்தையும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்.

குழந்தைகளோட பெற்றோர்கள் எல்லாம் படிக்காதவங்க. அதனாலே பள்ளிகூடத்து மேல ஈர்ப்பை உண்டாக்க ‘நிலாப்பள்ளி’ நிகழ்வு பௌர்ணமி நாள் இரவு முழுக்க நடத்துவோம். மாதம் ஒரு முறை ஈரோடு ‘டிரஸ்ட் மருத்துவமனை’ துணையோட மருத்துவ முகாமும், குழந்தைத் தொழிலாளர் தினத்துக்கு ஊக்கத்தொகை கொடுக்குற நிகழ்வையும் பெருசா நடத்துறோம். பள்ளிக்கூடங்களிலேயே சின்ன சின்னதா நூலகங்களை ஏற்படுத்தி ஆவணப் படங்கள் போட்டுக் காட்டுறோம். அது குழந்தைகளுக்கு பயனுள்ளதா இருக்கு. இதுபோக ‘களிமண் விரல்கள்’ அமைப்புத் துணையோட ஆண்டுதோறும் நாளு நாள் கோடை முகாம் நடத்துறோம்.

அதிலே களிமண் பொம்மை செய்யிறது, பொம்மலாட்டம், நாடகம், புகைப்பட கலையின்னு நிறைய சொல்லிக்கொடுக்கிறோம். ‘கிறிஸ்டியன் பிரதர்ஸ் ட்ரஸ்ட் அண்டு ரைட் டர்ன் ஆர்கனிசேசன்’ மூலமா குழந்தைகளைக் கல்வி பயணத்துக்காக சென்னைக்கு கூட்டிட்டு வர்றோம். இதெல்லாம் பண்றது மூலமாதான் குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அவங்க பெற்றோர்கள் மத்தியிலேயும் நம்பிக்கைய ஏற்படுத்த முடியும். சுடர் தொண்டு நிறுவனம் தொடர்ந்து இயங்க காரணம் எங்க கூட இருக்கிற ஆசிரியர்கள் தான். அர்ப்பணிப்பு உணர்வோட, பழங்குடி மக்களின் வாழ்வியலை புரிஞ்சிக்கிற ஆசிரியர்கள் தான் இங்க வேலை பார்க்க முடியும்.

கடந்த பத்து வருசத்திலே நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சிரமம் தாங்க முடியாம வேலைய விட்டுட்டுப் போய் இருக்காங்க. குழந்தைங்க மனசிலே தாக்கத்தை ஏற்படுத்தி நிலைச்சி இருக்கிறவங்க தான் இப்போ வரைக்கும் இருக்காங்க. இப்படி கடந்த பத்து வருசத்திலே முப்பது இடங்கள்லே பள்ளிக்கூடம் திறந்து இருக்கிறோம். அதிலே பத்து அரசு தொடக்கப்பள்ளிகள். இதிலே ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு படிக்க அனுப்பி இருக்கிறோம். இப்போ பத்து பேரு காலேஜ் படிச்சிட்டு இருக்காங்க. 2014, 2016, 2017 ஆம் ஆண்டுகள்லே மத்திய அரசின் அறிவியல் துறை மற்றும் தொழில்நுட்பத்துறை நடத்துற ‘தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில’  ‘சுடர்’ கல்வி நிலையத்திலே படிச்ச குழந்தைங்க இளம் விஞ்ஞானி விருது வாங்குனாங்க.

‘சுடர்’ தொண்டு நிறுவனத்துக்கு பெருமை சேர்க்கிற விஷயமா இருந்துச்சி. ‘போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்புகள்’ என்கிற தலைப்பிலே பழங்குடி மாணவனோட ஆய்வு தேசிய அளவிலே தேர்வு பண்ணாங்க. இளம் விஞ்ஞானி விருதும் தந்தாங்க. அந்த விருது அந்த கிராமத்துக்குப் பெருமை மட்டும் சேர்க்கலை. அறுபது கிலோ மீட்டருக்கு பஸ் போக்குவரத்து வசதியே இல்லாம தவிச்ச மக்களுக்கு பேருந்து வசதி கிடைச்சது.  

இந்த பேருந்து வசதி வந்ததாலே எல்லாரும் வெளியே வந்து படிக்க ஆரம்பிச்சிடுவாங்க. இன்னும் சில ஆண்டுகள்ளே சமூக ரீதியாவும், பொருளாதார ரீதியாவும் பெரிய மாற்றம் நிகழும்னு நிச்சயம் நம்புறேன். என்னும் சுடர் நடராஜ் மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத அந்த மலைக்கிராம குழந்தைகளை பள்ளிக்கூடம் போக வச்சிடணும் ஏன்னா கல்வி தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்” என்கிறார்.    
                   
தொகுப்பு: தீக்சா தனம்

Tags : mountain ,The Mountain , Mountain, top, glowing, flame
× RELATED கடையம் வட்டார மலையடிவார கிராமங்களை...