×

பச்சைக்கிளிகள் வளர்ப்பது சட்டப்படி குற்றம்.. தெரியுமா?

அந்த வீட்டு வாசல் முன்பு பைக்கை நிறுத்திய அடுத்த நிமிடம் கிளிகள் கீச்சிடும் சத்தம் காதை கொஞ்சுகிறது. அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அந்த வீடு, சிறிது சலசலப்பை கேட்ட அடுத்த நிமிடம் பரபரப்பானது. காரணம் அங்கு இருந்த கிளிகள். கூண்டுக்குள் இருந்த அனைத்தும் சிறகுகளை படபடத்து கிச்சிட்டு கொண்டு இருந்த அனைத்தும், ஒரு விரலுக்கு மட்டுமே அடங்கின.

கிளிகள் முன் ஒரு விரலை காட்டி ஷ்...ஷ்... என்று சைகையை காண்பித்தார் ராஜு. அடுத்த நிமிடம் அனைத்தும் கப்சிப் என தன் கூண்டுக்குள் இருக்கும் சூரியகாந்தி விதைகளை சாப்பிட ஆரம்பித்தன. கண்ணாடி நிறுவனத்தில் வேலைப் பார்த்து வரும் ராஜு கடந்த இரண்டு வருடமாக தான் பறவைகளை பராமரித்து வருகிறார். ‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே பறவைகளின் கீச்சிடும் சத்தம் பிடிக்கும். அவற்றை பார்க்கும் போது மனசு லேசான மாதிரி இருக்கும். அது மட்டம் இல்லை, அதன் சத்தம் மற்றும் அவை பறக்கும் விதம் எல்லாமே என்னை ரொம்ப ரிலாக்ஸ் செய்யும். அப்ப எனக்கு பறவையை பிடிக்கும். ஆனால் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படல.

எல்லாரையும் போல், மீன் தொட்டி தான் வைச்சிருந்தேன். அதன் பிறகு தான் கிளி வளர்க்கலாம்ன்னு தோணுச்சு. முதலில் நான் வாங்கிய பறவை காக்டெயில். இதுவும் கிளி வகையை சேர்ந்தது. நாலு ஜோடி வாங்கி வளர்த்தேன். அதன் பிறகு கண்ணூர் வகை கிளிகள் கிடைச்சது. இரண்டரை மாசம் குஞ்சாக என்னிடம் வந்தது. வீட்டுக்குள்ள தான் சுத்தும். கூண்டுக்குள்ள எல்லாம் அதை வைக்கல. நாம சொல்றது எல்லாம் புரியும். அதே போல் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்கும். அதன் நடவடிக்கையை பார்த்து எனக்குள் இந்த வகை கிளிகள் வளர்க்கணும்ன்னு முடிவு செய்தேன்’’ என்றவர் ஒவ்வொரு வகையிலும் ஒரு ஜோடியினை வாங்கியுள்ளார்.

‘‘ஆரம்பத்தில் நான் என்னுடைய விருப்பத்திற்கு தான் வாங்கினேன். அந்த சமயத்தில் எனக்கு ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் நேரடியாக பண்ணைக்கு சென்று அங்கு மொத்தமாக வாங்கி சப்ளை செய்து வந்தார். என்னுடைய நண்பர் பெட் ஷாப் வைத்து இருப்பதால், அவருக்கு இதன் தேவைகள் இருப்பது தெரிந்தது. அதனால் அவரின் தேவையை நான் பூர்த்தி செய்ய நினைச்சேன். நேரடியாக பண்ணைக்கு சென்று கிளிகளை வாங்கி அதில் வரும் லாபத்தில் எனக்கான கிளிகளை வாங்குவேன். இப்போது குஞ்சுகளாக வாங்கி அதற்கு பயிற்சி அளித்து கொடுக்கலாம்ன்னு யோசிச்சேன். இந்த பறவைகளை பொருத்தவரை குஞ்சுகளை விட பயிற்சி பெற்ற பறவைக்கு தான் டிமாண்ட் அதிகம்.

அதாவது குஞ்சு பறவைன்னா ஒரு ரேட், அதுவே இரண்டு மாத பறவைன்னா ஒரு ரேட், இதில் பயிற்சி பெற்ற பறவைன்னா அதுக்கு தனி ரேட்’’ என்றவர் இது வரை லவ் பேர்ட்ஸ் மட்டுமே 50 ஜோடிகள் வரை பயிற்சி அளித்துள்ளார். ‘‘கிளியை பொருத்தவரை இரண்டு மாசம் தான் பயிற்சி அளிப்பேன். அதன் பிறகு அதை வாங்கி செல்பவர்கள் பேச்சினை கேட்கும். பறவைகளை பொருத்தவரை அது ஒரு இடத்தில் இருந்தால் அது தான் அதன் உலகம்ன்னு நினைத்துக் கொள்ளும். கூண்டுக்குள் இருந்தாலும், அது தான் அதன் உலகம்ன்னு நினைத்துக் கொண்டு அதற்குள் தான் இருக்கும். வெளியே வரவே வராது. சொல்லப் போனால், கொஞ்சம் முரடாகவும் மாறும் வாய்ப்புள்ளது.

அதனாலேயே இது போன்ற கிளிகளை நாம் கூண்டுக்குள் வளர்க்க கூடாது. வீட்டுக்குள் இருந்தா, பறந்துவிடும்ன்னு அதன் இறக்கைகளை பியித்துடுவாங்க. அப்படியும் செய்யக்கூடாது. அதன் இறக்கைகள் தான் அழகே. பயிற்சி பெற்ற கிளிகள் நம்மை விட்டு பறந்து போகாது. நாம தான் அதன் உலகம்ன்னு நினைச்சு நம்மையே சுற்றி வரும். நாய்கள் எப்படியோ அது போல தான் கிளிகள். அதுக்கு நாம சாப்பாடு கொடுத்து பயிற்சி அளிப்போம். இதற்கு சூரியகாந்தி விதைகளை கொடுத்து பயிற்சி அளிக்கிறோம். ஆரம்பத்தில் நாம சொல்றது புரியாது. ஆனால் போகப் போக நாம சொல்றதை எல்லாமே கேட்கும்.

அதே போல் பயிற்சி கொடுத்த பறவைகளை நாம் கூண்டில் அடைக்ககூடாது. அப்படி அடைச்சா அதை மறுபடியும் பயிற்சி கொடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. ரொம்ப வைல்டா மாறிடும். சில கிளிகள் கடிக்க கூட வரும். நாம் சொல்றதை கேட்காது’’ என்றவர் அதன் வகைகளைப் பற்றி விவரித்தார். ‘‘லாரிகிட், காக்டெயில் ஆஸ்திரேலியா இனத்தை சேர்ந்தது. மக்காவ், கண்ணூர் அமெரிக்காவை சேர்ந்த கிளிகள். கழுத்தில் வளையம் இருக்கும் கிளிகள் எல்லாம் இந்தியாவை சேர்ந்தது. ஆப்ரிக்கன் கிரே பேரட், ஆப்ரிக்காவை சேர்ந்தது. ரோசெல்லா, காக்கடூ ஆஸ்திரேலியா கிளிகள். புறாக்களை பொருத்தவரை இந்தோனேசியா மற்றும் இந்தியாவில் அதிகம்.

லவ் பேர்சிலம் நிறைய வகை இருக்கு. பேன்சி, பட்டபிளை, ஆப்ரிக்கன் லவ் பேர்ட்ஸ்... இதில் கொஞ்சம் உயர் ரக கிளிகள் என்றால் அவை ஆப்ரிக்கன் கிரே பேரட், மெக்கோ, காக்டோன்ன சொல்லலாம். அதில் ஆப்ரிக்கன் கிரே பேரட் எல்லா வகை கிளிகளை விட மிகவும் புத்திசாலி. அந்த ஒரு கிளி மட்டுமே பயிற்சி கொடுத்தா 120 மொழிகள் பேசும். அது மட்டும் இல்லை, நாய், பூனை போலவும் கத்தும். இந்த கிளிகள் எல்லாம் குறைந்த பட்சம் ஏழாயிரம் முதல் லட்சங்கள் வரை விலைக்கு கிடைக்கும். அதன் ரகத்திற்கு ஏற்ப விலையும் நிர்ணயிக்கப்படும். என்னிடம் இருக்கும் எல்லா கிளிகளுக்கும் நான் உரிமம் வாங்கி வச்சு இருக்கேன். அப்படி வாங்கினா தான் இதனை வீட்டில் வளர்க்க முடியும்.

எல்லா கிளிகளின் கால்களிலும் ஒரு சின்ன வளையம் இருக்கும். அதில் ஒரு எண் குறிப்பிட்டு இருக்கும். அது தான் அந்த கிளியின் உரிமம் எண். இதை ஒரு ஜோடி கிளி வாங்கும் போதே வாங்கிடுவேன். நான் பயிற்சி அளித்து அதை மற்றவரிடம் கொடுக்கும் போது, அந்த உரிமத்துடன் சேர்த்து கொடுத்திடுவேன். மேலும் ஒவ்வொரு முறை ஒரு ஜோடி கிளி வாங்கும் போது, அந்தக் கிளிக்கான உரிமம் பெறவேண்டும். இந்த கிளிகளுக்கு எல்லாம் உரிமம் இருக்கும். ஆனா நம்மூர் பச்சைக் கிளிகளுக்கு மட்டும் உரிமம் கொடுப்பதில்லை. அதை வீட்டிலும் வளர்க்கக்கூடாது. அப்படி வளர்ப்பது சட்டப்படி குற்றம்’’ என்றவர் இதை ஒரு தொழிலாக செய்தால், அதற்கு பொறுமை மிகவும் அவசியம் என்றார்.

‘‘பிசினஸ் என்று இறங்கினால், உடனடியாக நாம் அதில் சம்பாதிக்க முடியாது. கொஞ்சம் கஷ்டப்படணும். எல்லாவற்றையும் விட பொறுமை ரொம்ப முக்கியம். முதலில் நாம ஒரு கிளியை வாங்கினா அந்த கிளியை பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும். அதாவது ஒரு குழந்தை போல பார்த்துக்கணும். நம்ம குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னா உடனே டாக்டரிடம் கூட்டிக்கிட்டு போறோம்... அதே போல் தான் கிளிகளும். அதை நாம எளிதா கண்டுப்பிடிக்கலாம். ஓடி விளையாடிக் கொண்டு இருக்கும் கிளி, திடீரென்று சாப்பிடாது, ஒரே இடத்தில் சேர்ந்து உட்கார்ந்து இருக்கும். அப்படி இருந்தா என்ன பிரச்னைன்னு பார்த்து கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளிக்கணும்.

அதற்கு பிறகு எல்லா கிளிகளும் உடனடியாக முட்டை இடாது. முதலில் அதற்கு அது இருக்கும் இடம் பற்றி ஒரு நம்பிக்கை வரணும். அதன் பிறகு தான் அது முட்டையிடும். மேலும் எல்லா முட்டைகளும் குஞ்சு பொறிக்கும்ன்னு சொல்ல முடியாது. சில முட்டைகளில் எதுவுமே இருக்காது. அப்படி இருக்கும் முட்டைகளை அதுக்கே தெரியும். அதுவே அந்த முட்டைகளை உடைச்சிடும். சில கிளிகளுக்கு பயிற்சி கொடுத்திட்டா அது நாய் போல நம்ம வீட்டுக்கு பாதுகாப்பா இருக்கும். ஏதாவது சின்ன சலனம் அல்லது பழக்கமில்லாதவர்கள் வீட்டுக்குள் வந்தா சத்தம் போட்டு ஊரையே கூட்டிடும். அதே போல் வீட்டில் இருக்கும் பொருட்களை கூட எடுக்க விடாம துரத்தும்’’ என்றவர் நாய்களையும் இதே போல் பயிற்சி அளித்து வளர்த்து வருகிறார்.

‘‘நாய்களில் என்னிடம் இருப்பது எல்லாம் ஷோவில் வருவது தான். ஷீட்சு, இது பார்க்க குட்டி கரடி பொம்மை மாதிரி இருக்கும். டாக் ஷோக்களில் பெரும்பாலும் இந்த நாய் தான் இருக்கும். இதன் அடுத்த பீரிட் லசாப்சோ. அப்புறம் லாப்ரேடர், ரெட்ரீவர், ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன்... இது போன்ற நாய்களுக்கு பயிற்சி அளித்து இருக்கேன். என்னிடம் ஷீட்சு (டோரா) மற்றும் கோல்டன் ரெட்ரீவர் (ராக்கி) இருக்கு. ஷீட்சு நிறைய டாக் ஷேக்களில் பங்கு பெற்று பரிசும் பெற்று இருக்கும். அதன் முடி தான் அழகே. அதை மெயின்டெயின் செய்ய ஸ்பாக்கு எல்லாம் கொண்டு போகணும். ஒரு முறை ஸ்பாக்க்குகே ரூ.6000 வரை செலவாகும். என்னிடம் இருக்கும் ரெட்ரீவர் இப்ப ஷூட்டிங் போய் இருக்கும்.

அயோக்கியாவில கூட நடிச்சு இருக்கு. ஷீட்சு டிக் டாக் எல்லாம் செய்து இருக்கு. நாய்களை பொருத்தவரை இரண்டு நாள் நம்முடன் பழகிட்டா போதும். நமக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யும். ஒவ்வொரு நாய்க்கும் ஒரு குணாதிசயம் இருக்கும். அதை புரிந்துக் கொண்டு பயிற்சி அளிக்கணும். பறவைகளைப் பொருத்தவரை இங்குள்ள பண்ணையில் இருப்பதை பார்த்து வாங்கணும். கொல்கத்தாவில் இருந்து பறவைகளை கொண்டு வராங்க. அது பல சமயம் ஆரோக்கியமா இருக்காது. வாங்கும் போது நல்லா இருக்கும். அதன் பிறகு அது அப்படியே சோர்ந்து ேபாயிடும். சில பறவைகள் இறந்து கூட போகும் வாய்ப்புள்ளது. மேலும் எந்த ஒரு செல்லப்பிராணிகள் வாங்குவதாக இருந்தாலும் தெரிந்தவர்கள் மற்றும் நம்பிக்கையான பெட்ஷாப்பில் வாங்குவது நல்லது’’ என்றார் ராஜு.

தொகுப்பு: ஷம்ரிதி

படங்கள்: லூயிஸ் பால்

Tags : Tattoos, breeding, legal offense, know
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...