வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அச்சமூட்டும் வகையில் உள்ளது: நோபல் பரிசு வென்ற அபிஜித் பேனர்ஜி கருத்து

டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். அதில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு, மிகச்சிறப்பாக இருந்தது. அனைவருக்கும் அதிகாரமளித்தல் என்ற அவரது  பார்வை தெளிவாக இருப்பதாகவும், பிரதமர் மோடி கூறினார். பல்வேறு பிரிவுகளில், இருவருக்கும் இடையே, ஆரோக்கியமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும், பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

அபிஜித் பானர்ஜியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குவதாக, பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் பேட்டியளித்த அபிஜித் பேனர்ஜி; பிரதமர் உடனான சந்திப்பு நல்ல முறையில் அமைந்தது. பெரும்பாலான ஆண்டுகளை கல்வித்துறை மேம்பாடு தொடர்பான ஆய்வுக்கு செலவிட்டுள்ளேன். கல்வி கர்ப்பித்தலின் தரத்தை உயர்த்துவது குறித்து தொடர் ஆய்வை மேற்கொண்டு உள்ளேன். மக்கள் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சை பெறவில்லை என்றும் கருத்து கூறினார்.

குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்துவிட்டாலே மொத்த வருமானத்தையும் செலவிடும் நிலை இருக்கக்கூடாது. முறைப்படுத்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அப்பால் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு, அனைவருக்கும் வங்கிக்கணக்கு திட்டம் தொலைநோக்குடையது. வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அச்சமூட்டும் வகையில் உள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை குறித்து கருத்துக்கூற தற்போது இயலவில்லை. அனைத்து மாநில அரசுகளுடன் இனைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: