×

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி குறைவால் கயிறு தொழில் பாதிப்பு

புதுக்கோட்டை: தேங்காய் நார் கயறு தொழில் கடும் நெருக்கடியை சந்திக்க தொடங்கியுள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலனை அரசு கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. தேங்காய் நார் கயிறுகள் கட்டடங்களுக்கு சாரம் அமைக்கவும், கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டடங்களுக்கு சாரம் அமைக்க கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் குறைந்ததாலும் கிணறுகள் இல்லாத நிலை உருவானதாலும் இந்த தொழிலில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது.

அதன்பிறகு தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ் மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது. மண் அரிப்பைத் தடுக்கும் கேக் மற்றும் பழத் தோட்டங்களில் கொடிகள் படர்வதற்கும் பயன்படுகிறது. இந்த தயாரிப்புகள் அனைத்தும் ஏற்றுமதி சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. உலகளவில் சிந்தெட்டிக் மெட்டீரியல் மூலம் தயாரித்த பொருட்களுக்கு பதில் தேங்காய் நார் மூலம் தயாரிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் உலகளவில் இந்த பொருளுக்கான தேவை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்தத் தொழில் கிடையாது என்பதோடு அங்கு ஆரம்பித்தால் அதிக செலவு ஏற்படும் என்பது நமக்கிருக்கும் கூடுதல் பலம். இந்தத் தொழிலுக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களும் தமிழகத்திலேயே கிடைக்கிறது. அதேநேரத்தில் சிலர் நார் வாங்கி வந்து கைராட்டை மூலம் கயறு தயாரிக்கும் பணியை இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர். தேங்காய் நார்தான் இதன் முக்கிய மூலப்பொருள். புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகளவில் இருந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேங்காய் மட்டையை வாங்கிச்சென்றனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேங்காய் நார் தயாரிக்கும் தொழிலும் நடைபெற்று வருகிறது.

தேங்காயை உரித்து பிறகு தேங்காய் மட்டையை நன்கு காயவைத்து அதில் இருக்கும் நார்களை மிஷின் வைத்து தனியாக பிரித்து எடுத்து அதனை மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. இதனால் தேங்காய் மட்டை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு தேங்காய் நார் உற்பத்தி தொய்வு ஏற்பட்டுள்ளது. பாதிப்படையாத ஒரு சில தென்னை மரங்கள் தற்போது தேங்காய் காய்க்க தொடங்கவில்லை. இதனால் வீட்டிற்கு தேவையான தேங்காய்கள் கூட விவசாயிகள் நகர் புறங்களில் உள்ள கடைகளுக்கு சென்று வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி பல காரணங்களால் தேங்காய் நார் தயாரிக்க தேவையான தென்னை மட்டை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் அதனை நம்பியுள்ள விவசாயிகளும் பாதிப்புள்ளாகியுள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய இழப்பீடு அல்லது உதவிதொகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pudukkottai district , Rope
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...