×

கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் 30 ஆண்டாக சாலை வசதி இல்லாத காந்திநகர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே, கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள காந்திநகர் மற்றும் லட்சுமிநகரில் பல ஆண்டாக சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் காந்திநகர் உள்ளது. இந்த நகர் உருவாகி 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பொதுமக்கள் அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். இப்பகுதி பிள்ளையார்கோயில் தெருவில் குண்டும், குழியுமாக சாலை உள்ளது. இந்த பகுதிக்கான மெயின்ரோடாக இந்த தெரு உள்ளது. இதில் நடந்து செல்ல பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். மழை காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்குகிறது. சாலை வசதி கோரி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. வாறுகால் வசதியுடன் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தெருவில் சேதமடைந்த மின்கம்பம் உள்ளது. பலத்த மழை அல்லது காற்றுக்கு மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. இந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

அடிப்படை வசதியில்லாத லட்சுமி நகர்

இந்த ஊராட்சியில் உள்ள லட்சுமிநகர் 15 ஆண்டுகளுக்கு முன் உருவானது. இந்த பகுதியில் 7 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கஞ்சநாயக்கன்பட்டியிலிருந்து லட்சுமி நகர் செல்லும் மெயின் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறுகிறது. இதனால், பொதுமக்கள் நடக்கவோ, டூவீலர்களில் செல்லவோ அவதிப்படுகின்றனர். இப்பகுதி தெருக்களில் தெருவிளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரங்களில் லட்சுமி நகர் இருளில் மூழ்குகிறது. பெண்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் மூலம் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், உப்புச்சுவை அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்கு கல் அடைப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். தாமிரபரணி தண்ணீர் வருவதில்லை. இதனால், ஒரு குடம் குடிநீர் ரூ.12க்கு விலை வாங்கும் அவலநிலையில் உள்ளனர்.

காட்சிப் பொருளான சுய உதவிக்குழு கட்டிடம்

இப்பகுதியில் உள்ள பூபால் நகரில் 2013ல் கட்டப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம், பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதனால், கட்டிடமும் சேதமடைந்து வருகிறது. இதற்காக செலவழிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிதி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. மகளிர் சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதியில்லை. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதில், கொசுக்கள் உருவாகி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. மாலை 4 மணிக்கு மேல் வெளியே இருக்க முடியவில்லை பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் காந்தி நகர், லட்சுமி நகர், பூபால் நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gandhinagar ,Kanjayanakanpatti Panchayat ,Road Facility , Road Facility
× RELATED செல்போன்கள் திருட்டு