கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற கோயிலில் ஆஞ்சநேயர் சிலை திருட்டு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கோயில் சன்னதியில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை காரில் வந்து திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள துர்க்கையம்மன் சன்னதி பிரசித்தி பெற்றது. இங்கு மூலவரின் வலதுபுறத்தில் உள்ள சுவாமி சன்னதியில் ஆஞ்சநேயர் சிலை ஒன்று சுவரில் (கோஷ்டத்தில்) பதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அன்றிரவு 8 மணிக்கு கோயில் குருக்கள் கணேசன், சன்னதியை சுற்றி வந்தபோது கோஷ்டத்தில் இருந்த ஆஞ்சநேயர் கற்சிலை மாயமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் கோயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இரவு 7மணிக்கு ஒரு காரில் வந்த 5 பேர், (2 பேர் வேட்டி, சட்டை அணிந்திருந்தனர். 3 பேர் பேண்ட், சர்ட் அணிந்திருந்தனர்.) நேராக மூலவர் சன்னதி அருகே வந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

பின்னர் அவர்கள் 5 பேரும் ஆஞ்சநேயர் சிலை இருந்த இடத்துக்கு சென்றனர். அங்கு 3 பேர் சுவரை மறைத்து கொண்டு நின்றனர். 2 பேர், அந்த சிலையை கைகளால் ஆட்டி பெயர்த்து எடுத்து தயாராக வைத்திருந்த கட்டை பைக்குள் வைத்து கொண்டு வெளியே நின்றிருந்த காரில் ஏறி சென்று விட்டனர். கோயிலில் பக்தர்கள் நடமாட்டம் இருந்தும் 30 நிமிடத்தில் இந்த கொள்ளையை அரங்கேற்றியது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது. இதுகுறித்து நேற்று பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 1 அடி உயரமான ஆஞ்சநேயர் கல்சிலையாகும். 1,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதால் இது பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது.

Related Stories: