மண்ணெண்ணெய் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி ரேஷன் கடையை பெண்கள் முற்றுகை: கொசப்பூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: கொசப்பூர் ரேஷன் கடையில்  மண்ணெண்ணெய் விநியோகிப்பதில்  முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 75 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இங்குள்ள ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிகவும் குறைவாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்றும், 2 சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட மாட்டாது, என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

ஆனால், ஒரு சிலிண்டர் வைத்திருக்கும் பலருக்கு ரேஷன் கடைகளில்  மண்ணெண்ணெய் இல்லை என்று கடை ஊழியர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கொசப்பூரில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று காலை மண்ணெண்ணெய் வாங்குவதற்காக பெண்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அதில் பலருக்கு பல்வேறு காரணங்களை கூறி மண்ணெண்ணெய் இல்லை என்று, கடை ஊழியர் திருப்பி அனுப்பினார். சிலிண்டர் இல்லாதவருக்கும் மண்ணெண்ணெய் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த  குடும்ப அட்டைதாரர்கள்,  ரேஷன் கடையை முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கார்டுதாரர்கள் கூறுகையில், ‘‘கொசப்பூர் ரேஷன் கடையில்  பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் சரியாக விநியோகிப்பது இல்லை. அரிசி, சர்க்கரை போன்ற பொருட்கள் எடை குறைவாக வழங்குகிறார்கள். மேலும் பல குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் கொடுக்காமல் திருப்பி அனுப்புகின்றனர்.  அப்படியே வழங்கினாலும் அளவு குறைவாக கொடுக்கின்றனர். இவ்வாறு பொதுமக்களிடம் இருந்து முறைகேடாக  எடுக்கப்படும்  உணவு பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை இப்பகுதியில் ரேஷன் கார்டு இல்லாமல் வசிக்கும் வட  இந்தியர்களுக்கு கள்ளத்தனமாக இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை,’’ என்றனர்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில், ‘‘இந்த கடையில் 614 பேருக்கு உணவுப்பொருள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மண்ணெண்ணெய் முழுமையாக அரசு வழங்குவது இல்லை. இதனால் ஒதுக்கீடு செய்யப்படும் மண்ணெண்ணெயை  வைத்து கார்டுதாரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது,’’ என்றார்.

ஓட்டல்களுக்கு விற்பனை

ரேஷன் கடையில் கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை கடை ஊழியர்கள் பதுக்கி, இடைத்தரகர்கள் மூலம் சாலையோர சிற்றுண்டி, ஓட்டல்கள், குடும்ப அட்டை இல்லாத வட இந்திய மாநில  குடும்பங்களுக்கு அதிக விலைக்கு  விற்கபடுகிறது. மேலும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் இங்குள்ள இடைத்தரகர்கள் மூலம் ரேஷன்  அரிசியை வாங்கி ரயில் மூலம் கடத்தி சென்று ஆந்திராவில் அதிக விலைக்கு  விற்கின்றனர். இவ்வாறு கடத்தபட்ட இலவச அரிசி  போலீசாரால் கைப்பற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனாலும் ரேஷன் கடை அலுவலர் மற்றும் ஊழியர்கள்  உடந்தையாக இருப்பதால்   இலவச அரிசி கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: