கீழடியில் அகழாய்வுக்காக தோண்டிய குழிகள் மூடல் : பொதுமக்கள் ஏமாற்றம்

திருப்புவனம்: கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்பட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த ஜூன் 13ம் தேதி 5ம் கட்ட அகழாய்வு ரூ.47 லட்சம் செலவில் தமிழக தொல்லியல் துறை சார்பில் துவக்கப்பட்டது. இப்பகுதியை சேர்ந்த முருகேசன், கருப்பையா, மாரியம்மாள்,  போதகுரு, நீதியம்மாள் ஆகியோரது நிலங்களில் எட்டரை ஏக்கர் பரப்பளவில் 52 குழிகள் தோண்டப்பட்டு இப்பணிகள் நடந்தன. இதில் தொன்மையான தாழி வடிவிலான மண்பானை, நீண்டசுவர் போன்ற கட்டுமானம், சோழி, கழுத்து பதக்கம், சூது பவளம், மணிகள் உட்பட 900க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டறியப்பட்டன. இதற்கிடையே, இதற்கு முன்னதாக  நடந்த 4ம் கட்ட அகழாய்வு பணி குறித்த ஆய்வறிக்கை வெளியானது. இதில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தெரிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

 இதனையடுத்து கீழடி அகழாய்வை பார்வையிட வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஆர்வத்துடன் கீழடி வந்தனர். இப்படி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 5ம்  கட்ட அகழாய்வில் நீண்டசுவர் கட்டுமானம், தொட்டி, கால்வாய் உள்ளிட்டவை மட்டும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.விவசாயிகளிடம், அவர்களது நிலங்களை ஒப்பந்தப்படி செப்டம்பரில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதால் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் கடந்த வாரம் மூடப்பட்டன. இதனால் கீழடி வரும் பொதுமக்கள்  ஏமாற்றமடைந்து திரும்பி செல்கின்றனர். இங்கிருந்து தொல்லியல் துறைக்கு சொந்தமான தளவாட பொருட்கள் அனைத்தும் மதுரை விரகனூருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது பானை ஓடுகள் அனைத்தும் ரகம் வாரியாக  பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன.தற்போது மாணவர்கள் தங்கிய குடில்களை அகற்றும் பணி நடக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் அகழாய்வு தளத்தில் இருந்து தொல்லியல் துறையினர் முழுவதுமாக வெளியேற உள்ளனர்.

Related Stories: