இரு மாநில முதல்வர்கள் சந்தித்தும் பலனில்லை நீடிக்கிறது பெரியாறு சிக்கல்: புதிய அணை ஆய்வுக்கு ஒப்புதல் கேட்டு தமிழக அரசுக்கு கேரளா நிபந்தனை

மதுரை: கேரள அரசின் நிபந்தனையால் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்காமல் கைவிரிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடைேய நதிநீர் பிரச்னைக்கு மட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழகம் - கேரள மாநில நதிநீர் பிரச்னைகள் குறித்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராய் விஜயன் பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் பரம்பிகுளம் - ஆழியாறு,  பாண்டியாறு புன்னம்புழா, பெரியாறு அணை விவகாரங்கள் இடம்பெற்றன. இந்தப் பிரச்னைகளுக்கு இரு மாநில அளவில் சிறப்புக்குழு  அமைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டது.இதன்மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமான பெரியாறு அணை விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை என்னாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனென்றால் 2014ல் உச்சநீதிமன்றம்  முதற்கட்டமாக 142 அடி நீர் தேக்கலாம், அடுத்து பேபி அணையை பலப்படுத்தி 152 அடி தேக்கிக்கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. அதன்படி 142 அடி நீர் தேக்கப்படுகிறது.

 அடுத்தகட்டமாக 152 அடியாக  உயர்த்தும் திட்டத்திற்காக அணைப்பகுதியில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு 5 ஆண்டுகளாக கேரளா அனுமதி மறுத்து வருகிறது.  பேபி அணையை பலப்படுத்த  தமிழக அரசு ரூ.8 கோடி  ஒதுக்கியும் அந்த பணியை தொடங்க முடியாமல் வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு பாதையை மூடி வைத்துள்ளது. 20 ஆண்டுகளாக அணையில் மின்விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கிறது. அதற்கு  தரை வழியாக மின்சாரம் கொண்டு செல்ல   தமிழக அரசு ரூ.2 கோடி ஒதுக்கியும் அந்த பணிகளையும் தொடங்க முடியவில்லை. தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர், ஊழியர்கள், தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைக்கு சென்று திரும்புவதிலும், கேரளாவின் கெடுபிடிகளால் அஞ்சும் நிலை  நீடிக்கிறது. அணைப்பகுதிக்குள் வெளியாட்கள் அத்துமீறி நுழைவதை  தடுக்க, தமிழக அரசு இரும்புக்கதவு அமைக்கும் பணியையும் கேரளா தடுத்து விட்டது. அணை பாதுகாப்பு கேரள போலீஸ் பொறுப்பில் இருப்பதால், தமிழக பொறியாளர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.இதுபோன்ற சிக்கல்களுக்கு இரு மாநில பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4 நாட்களுக்கு முன் தமிழக அரசு, பரம்பிக்குளம் - ஆழியாறு மற்றும் பாண்டியாறு - புன்னம்புழா ஆகிய இரு நதிநீர் பிரச்னைக்கு  மட்டும் தனித்தனி குழு அமைத்து அறிவித்துள்ளது. பெரியாறு அணை பிரச்னைக்கு குழு அமைக்காமல் கைவிரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

இதுகுறித்து மூத்த பொறியாளர்கள், பாசன விவசாயிகள் கூறிய அதிர்ச்சி தகவல் வருமாறு:பெரியாறு அணை பிரச்னை குறித்த பேச்சுவார்த்தைக்கு கேரளா கடும் நிபந்தனை விதிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடி தேக்க உரிமை உண்டு. ஆனால் கேரளாவுக்கு வெள்ள அபாயம் இருப்பதால், 142 அடியை எட்டும் வரை  காத்திருக்காமல் முன்கூட்டியே தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து வெளியேற்றி கொள்ள வேண்டும், பெரியாறு  அணை அருகே மஞ்சமலையில் புது அணை கட்டும் திட்ட ஆய்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் ஆகிய இரு  நிபந்தனைகளை ஏற்றால், பிரச்னைகளை பேசி தீர்வு காணலாம் என்று கேரளா கூறுகிறது. கேரளாவில் வெள்ள சேதத்தை தடுக்க திட்டமிடப்பட்ட 6 புதிய அணைகளில் பெரியாறும் இடம்பெற்றுள்ளது. 142 அடி தேக்கவிடாமல் தடுப்பதும், அடுத்தகட்டமாக 152 அடிக்கு அடியெடுத்து வைக்கவிடாமல் தடுப்பதும் கேரளாவின் சூழ்ச்சியாக  உள்ளது. 142 அடி வரை தேக்காமல் முன்கூட்டியே திறந்தால், வைகை அணையில் கூடுதல் நீரை தேக்க முடியாத நிலை ஏற்படும். அதைவிட முக்கியமாக 152 அடி என்ற உரிமை பறிபோய் விடும். இதனை தமிழக அரசு ஏற்காமல் பெரியாறு  அணை பிரச்னை பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்காமல் கைவிட்டு இருப்பதாக அறிகிறோம். ஆனால் அணை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் கிடப்பில் போடுவதும் சிக்கல் அதிகரிக்க வழிவகுக்கும்.

இவ்வாறு கூறினர்.

‘142’ஐ எட்ட வாய்ப்பு

பெரியாறு அணையில் 2014, 2015 மற்றும் 2018ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் 142 அடி தேங்கி, உபரிநீர் கேரளா நோக்கி பாய்ந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், அணை நீர்மட்டம் நேற்று முன்தினம்  125.30 அடியானது. பருவமழை வலுக்கும் பட்சத்தில் நவம்பர், டிசம்பரில் 142 அடியை எட்ட வாய்ப்புள்ளது. வைகை அணை 71 அடி, மொத்த கொள்ளளவில் நேற்று முன்தினம் 62 அடியை தாண்டியது. தொடர்ந்து மழை நீடிப்பதால், வைகை அணை  விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: