ஜெயலலிதாவின் போலி கைரேகை பதிவு விவகாரம் சிபிஐயிடம் திமுக எம்எல்ஏ புகார் மனு

சென்னை: தமிழகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்தலில் அப்போதைய முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் கைரேகையை  முறைகேடாக பெற்றதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிவுறுத்தலின்படி திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன்  புகார் அளித்தார். இந்த  நிலையில் நேற்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரி துரைக்குமாரை நேற்று நேரில் சந்தித்து திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் பேசினார். அப்போது அவர் அவர் ஒரு புகார் மனு அளித்தார்.

அதன் பிறகு டாக்டர் சரவணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை நடத்த முன் வர வேண்டும். அப்போது தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான முழு விபரமும் தெரிய வரும். தற்போது ஆளுங்கட்சியால்  அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் முழுமையாக செயல்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அனுமதிக்கப்பட்ட போது அவரிடம் கையெழுத்து வாங்கிய டாக்டர் பாலாஜியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று மனு  அளித்துள்ளேன். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த முன்வராவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முழுமையாக விசாரணை திமுக சார்பில் நடத்தப்படும்.

Related Stories: