அனைத்து அரசு துறைகள் இணைந்தால் டெங்குவை கட்டுப்படுத்தலாம் : ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: அரசுத் துறைகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டால் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என்று  ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரை, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

 அரசு ேபாதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்தில் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தவும், கொசு உற்பத்தியை தடுக்கவும் அரசின் நடவடிக்கைகள்  போதுமானதாக இல்லை.

 கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தவும், டெங்கு பரவுவதை தடுக்கவும்  தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை இடத்தில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடக்கிறது. இந்தப் பணியை சுகாதாரத்துறை முதன்மை செயலர் கண்காணிக்கிறார்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘பொதுவாக குறிப்பிட்டு பொதுநல மனு செய்யக்கூடாது. அதற்கென போதுமான ஆவண, ஆதாரங்கள் இருக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஆகிய 3 துறைகளும் இணைந்து  செயல்பட்டால் தான் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி டெங்கு பரவாமல் தடுக்க முடியும். அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கை தொடர வேண்டும்’’ என உத்தரவிட்டு  மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: