×

புதுப்பொலிவு பெறும் பாண்டிபஜார் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நிறைவு: 15 நாட்களில் செயல்பாட்டுக்கு வருகிறது,..கலை நிகழ்ச்சி, போட்டி நடத்த திட்டம்

சென்னை: சென்னையின் மிக முக்கிய வணிக பகுதி தி.நகர். தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தி.நகர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் தி.நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாகவும் வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பாண்டிபஜாரில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் ரூ.38 கோடி செலவில் நடைபாதை வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் இந்த பணிகள் தொடங்கப்பட்டன. பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை 730 மீ., நீள பகுதி, தணிகாசலம் சாலை முதல் போக் சந்திப்பு வரை 380 மீ., நீள பகுதி, போக் சாலை சந்திப்பு முதல் அண்ணாசாலை வரை 565 மீ., நீள பகுதி உள்ளிட்ட 3 பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன.

இந்த 3 சாலைகளில் 6 மீ., முதல் 12 மீ., வரை அகலம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டன. இந்த நடைபாதைகளில் இருபுறங்களிலும் எல்இடி பல்புகள் உள்ள அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிவடைந்துவுடன் சாலையில் உள்ள அனைத்து சுவர்களை அழகுப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் நடைபாதையில் அமரும் வகையில் இருக்கைகள் (ஸ்ட்ரீட் பர்னிச்சர்) அமைக்கப்பட்டது.  அங்குள்ள மின் பெட்டிகள் வர்ணம் தீட்டப்பட்ட அட்டைகளை கொண்டு மறைக்கப்பட்டன. மேலும் சாலையில் உள்ள மரங்களை சுற்றி பொதுமக்கள் அமைரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. இந்த பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு நடைபாதை வளாகம் இன்னும் 15 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி ராஜ் செரூபல் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டிபஜாரில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நிறைவுடையும் தருவாயில் உள்ளது. இதை தவிர்த்து பாண்டி பஜாரை சுற்றியுள்ள 14 சாலைகளை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் மற்றும் ஸ்ட்ரீட் பர்னிச்சர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடைபாதை வளாகம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் நடைபாதை திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு விளையாட்டு பேட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

234 கார்களை நிறுத்தலாம்
பாண்டிபஜாருக்கு வரும் பொதுமக்கள் கார்களை நிறுத்திவிட்டு நடந்து செல்வதற்கு ஏதுவாக 236 இடங்களை கண்டறியப்பட்டு ஸ்மார்ட் பார்கிங் திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது. தியாகராய சாலை மற்றும் தனிகாசலம் சாலை சந்திப்பில் பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

நடைபாதை திருவிழாவின் முக்கிய அம்சங்கள்
* மியூசிக்கல் சேர்
* ஸ்நேக் அண்டு லேடர்
* நடைபாதை சதுரங்கம்
* வண்ணம் தீட்டுதல்
* நடைபாதை நடனம்
* செல்பி பாயின்ட்
* கரகாட்டம்
* பொய்க்கால் குதிரை
* இசை நிகழ்ச்சிகள்
* கார் இல்லாத ஞாயிறு
* சைக்கிள் ஷேரிங் திட்டம்

Tags : Bandipajar, art show
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...