நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்ததாக வசந்தகுமார் எம்பி திடீர் கைது

நெல்லை: நாங்குநேரி தொகுதிக்குள் வந்ததாக வசந்தகுமார் எம்பி திடீரென கைது செய்யப்பட்டார். அவர் உள்பட சிலர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நாங்குநேரி தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. களக்காடு அருகே கலுங்கடியில் மதியம் 2 மணிக்கு காரில் சென்று கொண்டிருந்த வசந்தகுமார் எம்பியை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்து நாங்குநேரி போலீஸ்  ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து வசந்தகுமார் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு எம்பி சாலை வழியாக செல்லக் கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. நான் பிரசாரம் செய்தால் தவறு எனக்கூறலாம்.

பாளையங்கோட்டையில் உள்ள எனது  இல்லத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் வழியில் என்னை போலீசார் தடுத்து நிறுத்தி இந்த வழியாக செல்லக் கூடாது என்றனர். உடனே மாற்று வழியில் செல்லலாம் என நினைத்து சென்று கொண்டிருந்தேன். அங்கேயும் என்னை  தடுத்து நிறுத்தி நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வாருங்கள் என அழைத்து வந்து விட்டனர் என்றார். மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார். எனினும் வசந்தகுமார் எம்.பி. உட்பட சிலர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு  செய்துள்ளனர். 

Related Stories: