×

வழக்கை வாபஸ் பெறாவிட்டால் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி செயற்பொறியாளர் நியமிக்கப்படுவார்

* துறை செயலாளர் மணிவாசன் எச்சரிக்கை * தேர்வை எதிர்கொள்ள பொறியாளர் சங்கம் முடிவு

சென்னை: வழக்கை திரும்ப பெறாவிட்டால் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி உதவி செயற்பொறியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று  அரசு செயலாளர் மணிவாசன் பொறியாளர் சங்கத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதை  தாங்கள் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சங்கத்தினர் பதில் சவால் விடுத்துள்ளனர். தமிழக பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது பதவி உயர்வு, ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் காலி  பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த இடங்கள் நிரப்பப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நிரப்பபடவில்லை. அந்த வகையில் 10 கண்காணிப்பு பொறியாளர், 116 செயற்பொறியாளர், 344 உதவி செயற்பொறியாளர், 650 உதவி  பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில், உதவி பொறியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மற்ற பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடிவு  செய்யப்பட்டது. இதில், 279 உதவி செயற்பொறியாளர், 116 செயற்பொறியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டது. இந்த பணியிடங்கள் 3:1 என்கிற அடிப்படையில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்களுக்கு  உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

இதில், பிஈ முடித்த இளநிலை பொறியாளர்கள் தங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு விதிகளில் இடம் உள்ளது என்று கூறி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதன்பேரில் தகுதியான இளநிலை பொறியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, எதிராக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பது  நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மணிவாசன் இளநிலை பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க விதிகளில் இடம் உள்ளது. எனவே வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறினார். இதை ஏற்க சங்கத்தினர் மறுத்து விட்டனர். இதனால், கோபமடைந்த  செயலாளர் மணிவாசன் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி உதவி செயற்பொறியாளர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சங்கத்தினர் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பொறியாளர் சங்கத்தினர் போட்ட வழக்கு திரும்ப  பெறப்படாது. பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் டிஎன்பிஸ்சி மூலம் தேர்வு நடத்தினால், அதை பொறியாளர்கள் எழுதுவது என்றும், விதிகளுக்கு புறம்பாக இளநிலை பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு  வழங்குவது வருத்ததுக்குரியது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது, பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : executive ,Executive Director ,DNPSC , Unless , withdrawn, Executive Director, DNPSC
× RELATED காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள...