நிலம் அபகரிக்க முயற்சி விவகாரம் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வரும் நவம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வடவேலூர் கிராமத்தில் 7 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளேன். இந்த நிலத்தை  அபகரிக்கவும், இந்த நிலத்தில் இருந்து என்னை வெளியேற்றவும் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணி, பிரபல ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி ஆகியோர் சட்டவிரோதமாக முயற்சி செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசிடம் புகார்  கொடுத்தும், இது வரை எந்த வழக்கு பதிவும் செய்யாமல் உள்ளனர். என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் என்.நடராஜன், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். பின்னர், மனுதாரர் புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை. மேலும் புகார் மனுவை நேரடியாக போலீஸ் நிலையம் சென்று அளிக்கவேண்டும். அதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், உயர் அதிகாரிகளிடம் முறையிடலாம். அதன்பின்னரும் வழக்குப்பதிவு  செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் விரிவான தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக மனுதாரர் செயல்பட்டுள்ளார். நேரடியாக உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும், என்று வாதிட்டார். இதனையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related Stories: