ஆசிரியர் வேலையை நிரந்தரம் செய்வதாக கூறி அமைச்சரின் மாஜி டிரைவர் 4 லட்சம் பணம் சுருட்டல்: அதிமுக முன்னாள் கவுன்சிலர் புகார்

விருதுநகர்: அமைச்சரின் முன்னாள் டிரைவர், பணம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் கலெக்டரிடம் புகார்செய்தார்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒன்றியம், முகவூர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயமணி, விருதுநகர் கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் ஜான் கென்னடி சேத்தூர் அரசினர் பள்ளியிலும், முகவூர் மேல்நிலைப்பள்ளியிலும் பகுதிநேர விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2017ல் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினார். வேலையை நிரந்தரம் செய்வதாக கூறி  அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின், அப்போதைய கார் டிரைவர் மாரிச்சாமி ரூ.4 லட்சம் எங்களிடம் வாங்கினார். ஆனால், கூறியபடி வேலையை நிரந்தரம் செய்யவில்லை. அவர் தற்போது அமைச்சரிடமும் வேலை பார்க்கவில்லை.

கொடுத்த பணத்தை கேட்டபோது, மாரிச்சாமி பலமுறை காசோலை கொடுத்தார். ஆனால், ஒவ்வொரு முறையும், காசோலைகள், அவரது வங்கிக் கணக்கில் பணமின்றி திரும்பி வந்தன. கடந்த மாதம் 1ம் தேதி இறுதியாக கொடுத்த  காசோலையும் பணமில்லாமல் திரும்பி வந்தது. நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்த, அமைச்சரின் முன்னாள் டிரைவர் மீது நடவடிக்கை எடுத்து, ரூ.4 லட்சத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.  இந்த  மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Related Stories: