கொடைக்கானல் - கும்பக்கரை மலை சாலையில் மண்சரிவு தனித்தீவாக கிராமங்கள் தத்தளிப்பு: விடிய, விடிய கனமழை கொட்டியது

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டிய கனமழை காணமாக கும்பக்கரை சாலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியுலகத் தொடர்பின்றி  மலைக்கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காற்றுடன் பெய்யும் மழையால் அவ்வப்போது பிரதான சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடியவிடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக கொடைக்கானல் - அடுக்கம் - கும்பக்கரை சாலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  மண்ணுடன் ராட்சத பாறைகள் உருண்டு கிடப்பதால் இச்சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், பழங்களை சந்தைக்கு எடுத்து செல்ல இந்த சாலையையே அடுக்கம், பாலமலை, காட்டுபள்ளம், தாமரைக்குளம் உள்ளிட்ட  மலைக்கிராம மக்கள் பெரியகுளம் சென்று வர பயன்படுத்துகின்றனர்.  இது துண்டிக்கப்பட்டுள்ளதால், மலைக்கிராமங்கள் வெளியுலகத் தொடர்பின்றி தனித்தீவாக தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய மண்சரிவால் இப்பகுதி மக்கள்,  விவசாயிகள், மாணவ, மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மண்சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  மழை காரணமாக கொடைக்கானல் ஏரிக்கு அருகே  முதியோர் விடுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதில் சமையல் கூடம் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertising
Advertising

ஊட்டி சாலையில் மண்சரிவு: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கெந்தளா பகுதியில் இருந்து  ஊட்டி செல்லும்  சாலையில்  மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள்  விழுந்துள்ளது. இதனால்   போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.  அப்பகுதியில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  இதனால்  மாணவ, மாணவிகள் உட்பட பொதுமக்கள்  பாதிக்கப்பட்டனர். ராட்சத பாறைகளை வெட்டி  அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். மழை  காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மலை ரயில் 3 நாள் ரத்துமேட்டுப்பாளையம்  மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கல்லார்  குன்னூர் மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில்  பாறைகள் உருண்டு விழுந்தில் ரயில் பாதை  சேதமடைந்துள்ளது. இதனால் நேற்று  காலை மேட்டுப்பாளையத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற மலை ரயில்  பாதியில் திரும்பியது. மேலும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளதால்  மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரயில் சேவை  மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே  அறிவித்துள்ளது.

குமரியில் 23 வீடுகள் இடிந்தன

குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக நேற்று ஒரே நாளில் 23 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மழையால் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பவானி சாகர் அணை திறப்பு105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையில், 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால், அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதை தொடர்ந்து உபரிநீர் பவானி ஆற்றின் கீழ்மதகுகள் மற்றும்  மேல்மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. நீர் இருப்பு 29.9 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு  விநாடிக்கு 13,211 கன அடி நீர்வரத்து உள்ளது. பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுவதால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான  இடத்திற்கு செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

சுருளி அருவியில் குளிக்க தடை தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Related Stories: